என்.எல்.சி., அதிகாரி வீட்டில் திருட முயற்சி: 25 சவரன் நகை மூட்டையில் இருந்ததால் தப்பியது
நெய்வேலி: நெய்வேலி என்.எல்.சி., அதிகாரி வீட்டில் மாயமான 25 சவரன் நகைகள் மீண்டும் கிடைத்ததால் போலீசார் நிம்மதி அடைந்தனர்.கடலுார் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 27ஐச் சேர்ந்தவர் ஜெகன்.35; என்.எல்.சி., முதல் சுரங்க அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் தனது குடும்பத்துடன் ஜவுளி எடுக்க சேலம் சென்றார். நேற்று முன்தினம் நள்ளிரவு வீடு திரும்பினார். வீட்டின் முன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோ திறந்திருந்ததால் 25 சவரன் நகை மற்றும் வெள்ளிப் பொருள் திருடு போனதாக நெய்வேலி தெர்மல் போலீசில் ஜெகன் புகார் அளித்தார். அதன்பேரில், டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் தலைமையில் தெர்மல் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வீட்டை சுற்றி வந்து குற்றவாளிகளை தேடியது.இந்நிலையில், வீட்டில் இருந்த பொருட்கள் மூட்டையாக கட்டி வைக்கப்பட்டிருந்தது குறித்து ஜெகனிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஓரிரு தினங்களில் வீட்டை காலி செய்து, வேறு வீட்டிற்கு செல்ல இருந்ததால் பொருட்கள் அனைத்தையும் மூட்டைகளாக கட்டி வைத்துள்ளதாகவும், அது போலவே, நகைகளையும் தனி பையில் போட்டு வைத்ததாகவும் கூறினார். இதையடுத்து போலீசார் வீடு முழுதும் நகை பையை தேடினர். அப்போது நகைகள் இருந்த பை, கட்டிலுக்கு அடியில் இருந்ததை கண்டுபிடித்து பிரித்தனர். அதில், நகைகள் முழுதும் அப்படியே இருந்ததை கண்டதும் ஜெகனை விட போலீசார் பெரும் நிம்மதி அடைந்தனர். இருப்பினும் ஜெகன் அளித்த புகாரின் பேரில், தெர்மல் போலீசார் வழக்கு பதிந்து திருட முயன்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கூறுகையில், 'தற்போது நிலவும் சூழலில், யாரை பிடித்து எப்படி விசாரிப்பது, நகைகளை எப்படி மீட்க போகிறோம் என தெரியாமல் திருவிளையாடல் படத்தில் நாகேஷ் புலம்பியதை போல் புலம்பினேன்.எந்த கும்பலோ என் வேலைக்கு, வேலை பாத்துட்டான் என கவலைப்பட்டேன். நல்ல வேலையாக கடவுள் காப்பற்றி விட்டதாக நெகிழ்ச்சியுடன்' கூறினார்.