கடலுார் : கடலுார் அருகே பா.ம.க., கொடிக்கம்பத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி ஏற்றியதை கண்டித்து, பா.ம.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கடலுார் அடுத்த சேடப்பாளையம் பஸ் நிறுத்தத்தில், சாலையோரம் அனைத்து அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள் உள்ளன. இங்கு நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் பா.ம.க., கொடிக்கம்பத்தில் இருந்த கொடியை இறக்கிவிட்டு, வி.சி., கட்சி கொடியை ஏற்றியுள்ளனர். நேற்று காலை இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பா.ம.க.,வினர் அப்பகுதியில் குவிந்தனர்.பா.ம.க., கொடிக்கம்பத்தில் வி.சி., கொடி ஏற்றியவர்களை கைது செய்யக்கோரி, மாவட்ட செயலாளர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில், 200க்கும் மேற்பட்டோர், காலை 8:30 மணியளவில் சேடப்பாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கடலுார் முதுநகர் இன்ஸ்பெக்டர் உதயக்குமார், எஸ்.ஐ., எழில்தாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பா.ம.க., கொடிக்கம்பத்தில் இருந்து வி.சி., கொடியை அகற்றி, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட நபரை விரைவில் கைது செய்வதாக கூறினர். அதனையேற்று 9:00 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது.அதை தொடர்ந்து, பா.ம.க., கொடியை மாவட்ட செயலாளர் முத்துக்கிருஷ்ணன் ஏற்றி வைத்தார்.இதுகுறித்து பா.ம.க.,வினர் அளித்த புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.மறியலால் கடலுார்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து தடைபட்டதால், காலை நேரத்தில் பள்ளி, அலுவலகம், வேலைக்கு செல்வோர் அவதியடைந்தனர்.