உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்

கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்

கடலூர் : கடலூர் கலெக்டர் அலுவலகத்தை சாமியார்பேட்டை மீனவப் பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிதம்பரம் அடுத்த புதுப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ், சுந்தரமூர்த்தி. இருவரும் நேற்று முன்தினம் சிதம்பரத்தில் இருந்து சாமியார்பேட்டைக்கு செல்லும் அரசு பஸ்சில் ஏறினர். பரங்கிப்பேட்டை பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்ற போது சாமியார்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேர் படகு மோட்டாரை எடுத்துக் கொண்டு ஏறினர். அப்போது கோவிந்தராஜ், மோட்டாரில் உள்ள கிரிஸ் மேலே ஒட்டிக்கொள்ளப் போகிறது எனக் கூறியதால் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. கோவிந்தராஜ், சுந்தரமூர்த்தி இருவரும் சாமியார்பேட்டையைச் சேர்ந்தவர்களை தாக்கினர். தகவலறிந்த சாமியார்பேட்டையைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் புதுப்பேட்டை கிராமத்திற்குள் புகுந்து வீடுகள், கடைகள், வாகனங்களை அடித்து நொறுக்கினர்.சாமியார்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புதுப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதியில் பதட்டம் நிலவியதால் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சாமியார்பேட்டையைச் சேர்ந்த மீனவ பெண்கள் 300க்கும் மேற்பட்டோர் நேற்று காலை கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திரண்டு முற்றுகையிட்டனர்.வீடுகளில் அத்துமீறி நுழைவது, வயதானவர்களை கைது செய்வது, பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டுவது போன்ற செயல்களில் போலீசார் ஈடுபடுகின்றனர். தாக்குதல் சம்பவம் காரணமாக பஸ் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளது என கலெக்டரிடம் பெண்கள் முறையிட்டனர். கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் பெண்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை