உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரூ.14.30 லட்சம் மோசடி கோவை தம்பதி கைது

ரூ.14.30 லட்சம் மோசடி கோவை தம்பதி கைது

விருத்தாசலம்: வணிகவரித்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி விருத்தாசலம் நபர்களிடம் 14.30 லட்சம் ரூபாய் மோசடி செய்த கோவை தம்பதியை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் பெரியார் நகர், அவ்வைத்தெருவை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் மனைவி மகாலட்சுமி, 39; எம்.ஏ.,-பி.எட்., முடித்துள்ள இவர், தையல் ஆசிரியராக பணிபுரிகிறார். இவரது சகோதரரை ஸ்பெயின் நாட்டிற்கு அனுப்பிய சாம்சன் மூலமாக கோயம்புத்துாரைச் சேர்ந்த அசோக்குமார், 41; இவரது மனைவி விஜயதாரணி (எ) லட்சுமி,39; அறிமுகமாகினர். இவர்கள், சென்னை தலைமைச் செயலகத்தில், கல்வித்துறையில் உயர் அதிகாரிகளை நன்கு தெரியும் எனவும், அவர்கள் மூலமாக வணிகவரித்துறையில் இளநிலை உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக மகாலட்சுமியிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய அவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் 3 லட்சம் ரூபாயை கொடுத்தார். அப்போது, மேலும் 5 பேருக்கு வேலை இருப்பதாகக் கூறி, மொத்தமாக 14.30 லட்சம் ரூபாயை பெற்றனர். அதன்பின், தம்பதியை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுகுறித்து மகாலட்சுமி கடந்த 14ம் தேதி விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணனிடம் புகார் மனு அளித்தார். இவரது உத்தரவின்படி, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இன்ஸ்பெக்டர் கவிதா, சப் இன்ஸ்பெக்டர்கள் சந்துரு, ஜெயக்குமார் அடங்கிய தனிப்படை போலீசார், கோவை, இடிகரை, சரவணா கார்டன் குடியிருப்பில் பதுங்கியிருந்த அசோக்குமார், விஜயதாரணியை நேற்று பிடித்து விசாரித்தனர்.இதில், 7ம் வகுப்பு படித்த அசோக்குமார், எலக்ட்ரீஷியனாக வேலை செய்ததும், மகாலட்சுமியிடம் 14.30 லட்சம் ஏமாற்றியதும் தெரிந்தது. இதேப் போன்று, பலரை ஏமாற்றி, தம்பதி சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும் தெரிந்தது. உடன், போலீசார், தம்பதியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !