| ADDED : நவ 18, 2025 06:43 AM
கடலுார்: விருத்தாசலம் மற்றும் வேப்பூர் தாலுகா அலுவலகங்கள், பரவளூர் மற்றும் சிறுப்பாக்கம் கிராம ஊராட்சிகளில் நடந்து வரும் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது; அனைத்து தொகுதியிலும் 2,313 வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு வீடாக வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் திரும்ப பெற்று, தேர்தல் ஆணைய இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. விரைவாக பதிவேற்றம் செய்யும் வகையில் தற்போது கூடுதலாக 550 இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், 128 வருவாய்த்துறை பணியாளர்கள், 92 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பணியாளர்கள், 14 மாநகராட்சி சார்ந்த பணியாளர்கள், 75 நகராட்சி சார்ந்த பணியாளர்கள், 51 பேரூராட்சி சார்ந்த பணியாளர்கள், 90 கூட்டுறவுத் துறை பணியாளர்கள், 9 வேளாண்மைத் துறை பணியாளர்கள் என மொத்தம் 1,009 பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. சரியான முறையில் ஸ்கேன் செய்து, பிழையின்றி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறதா, வாக்காளர்கள் விடுபடாமல் பதிவேற்றம் செய்யப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என கூறினார். ஆய்வின் போது விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.