கவுன்சிலர் பேச்சால் டென்ஷனான கமிஷனர் வெளிநடப்பு! விருதை நகர மன்ற கூட்டத்தில் பரபரப்பு
விருத்தாசலம்; விருத்தாசலம் நகர மன்ற கூட்டத்தில் பதிலளிக்க விடாமல்அ.தி.மு.க., கவுன்சிலர் பேசியதால், கமிஷனர் வெளிநடப்புசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விருத்தாசலம் நகர மன்ற கூட்டம், சேர்மன் சங்கவி முருகதாஸ் தலைமையில் பிற்பகல் 2:40 மணிக்கு துவங்கியது. துணை சேர்மன் ராணி தண்டபாணி முன்னிலை வகித்தார். கமிஷனர் பானுமதி வரவேற்றார். கூட்டத்தில், கவுன்சிலர்கள் குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தன்னிறைவாக நிறைவேற்றுமாறு வலியுறுத்தி பேசியதாவது: ஏழை எளிய மக்கள் குடிநீர் இணைப்புக்கு பணம் செலுத்தவில்லை என்றால் உடனடியாக இணைப்பை துண்டிக்கும் அதிகாரிகள், அரசு அலுவலகங்களில் பல லட்சம் ரூபாய் குடிநீர் பாக்கி செலுத்தாத நிலையில், என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். பல அடுக்குமாடி குடியிருப்புகளை கண்டுகொள்வதில்லை. முறையாக வரி வசூலிக்காவிட்டால், நகராட்சிக்கு பொது நிதி எப்படி வரும். பாலுாட்டும் அறை, புறக்காவல் நிலையம், வரி வசூலிப்பு அறை என 4 கடைகள் தரப்பட்டு விட்டதால், நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நகரமன்ற கூடத்தில் கவுன்சிலர்களுக்கு உரிய இருக்கையில் பெயர் மற்றும் வார்டு எண் ஸ்டிக்கர் ஒட்டவில்லை. பஸ் நிலையத்தில் கழிவுநீர் சூழ்ந்து துர்நாற்றம் வீசுகிறது. அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை. இதற்ககெல்லாம் பதில் அளித்து கமிஷனர் பானுமதி பேசுகையில் கவுன்சிலர் குறுக்கிட்டு பேசியதால் டென்ஷன் ஆன கமிஷனர், 'பதில் கூற விடாமல் தொடர்ந்து நீங்களே பேசினால் எப்படி என கேள்வி எழுப்பினுார் இருப்பினும் கவுன்சிலர் பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்து பேசியதால், கமிஷனர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். இதனால், பரபரப்பு நிலவியது. தொடர்ந்து, வளர்ச்சிப்பணிகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, நகர்மன்ற கூட்டம் நிறைவு செய்யப்பட்டது.