கடலுார் பஸ் நிலையத்தில் குவிந்த பயணிகள் கூட்டம்
கடலுார் : தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு செல்ல கடலுார் பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.தீபாவளி பண்டிகையை தொடர்ந்து, 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து சென்னை போன்ற பெருநகரங்களில் பணிபுரிவோர், தொழில் செய்வோர் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர்.கடந்த 31ம் தேதி, தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய நிலையில், சொந்த ஊர்களில் இருந்து ஏராளமானோர் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு திரும்பி வருகின்றனர். இன்று (4ம் தேதி) அலுவலக ஊழியர்கள், தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லுாரிக்கு செல்ல வேண்டும்.இதற்காக கடலுார் மாவட்டத்தில் இருந்து சென்னையில் பணிபுரிவோர், கல்லுாரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கடலுார் பஸ் நிலையத்தில் நேற்று மாலை குவிந்தனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னைக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்திருந்த போதிலும், பயணிகள் பஸ்சில் போட்டிக் போட்டுக் கொண்டு ஏறினர்.இதனால், கடலுார் பஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.கடலுார் முதுநகர் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.