பெஞ்சல் புயல் எச்சரிக்கையால் கடலுார் பஸ் நிலையம் வெறிச்
கடலுார் : பெஞ்சல் புயல் காரணமாக கடலுார் மாவட்டத்தில் நேற்று விட்டுவிட்டு மழை பெய்தது.வங்கக்கடலில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு உருவான பெஞ்சல் புயல் நகர்ந்து வரும் வேகம் குறைவதும், அதிகரிப்பதுமாக கடந்த 2 நாட்களாக போக்கு காட்டியது. நேற்று முன்தினம் புயலாக மாறி நேற்று காரைக்கால்- மகாபலிபுரம் இடையே கரையை கடப்பதாகவும், அதனால் கடலுார் மாவட்டத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரித்தது.அதன்படி நேற்று காலை முதல், வானம் மேகமூட்டத்துடன், விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மாலை 3:30 மணிக்கு மேல் கன மழை பெய்தது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கினர்.சாலைகள் வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடியது. கடைவீதியில் உள்ள கடைகளில் வியாபாரம் 'டல்' அடித்தது. நேற்று அமாவாசை என்பதால் காய்கறி கடைகளில் மட்டும் காலையில் கூட்டம் இருந்தது.பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் இல்லதாததால் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் கிராம பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் குறைக்கப்பட்டதால் பஸ் நிலையம் வெறிச்சோடியது.