உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெல்லிக்குப்பத்தில் சரக்கு ரயில் மூலம் ஒடிசாவிற்கு சர்க்கரை மூட்டைகள் ஏற்றுமதி

நெல்லிக்குப்பத்தில் சரக்கு ரயில் மூலம் ஒடிசாவிற்கு சர்க்கரை மூட்டைகள் ஏற்றுமதி

நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பத்தில் இருந்து ஒடிசா மாநிலத்துக்கு ரயில் மூலம் சர்க்கரை மூட்டைகள் அனுப்பப்படுகிறது.விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு கடந்த ஓராண்டுக்கும் மேலாக ரயில் போக்குவரத்து நடைபெறுகிறது. கடலூர் முதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் மட்டும் ரயில்களில் சரக்கு ஏற்றும் வசதி இருந்தது.நெல்லிக்குப்பம் தனியார் சர்க்கரை ஆலையில் இருந்து பல மாநிலங்களுக்கு சர்க்கரை அனுப்ப வேண்டுமானால் லாரிகள் மூலம் முதுநகருக்கு எடுத்து சென்று ரயில்களில் ஏற்ற வேண்டும். சவுக்கு மரங்கள் ஏற்றவும் இதே நிலை இருந்தது.கடலூர் முதுநகரில் போதுமான இடவசதி இல்லை. நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில் சரக்குகள் ஏற்ற வசதி செய்ய வேண்டுமென சர்க்கரை ஆலை நிர்வாகமும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்தனர். அதனையேற்று நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில் சரக்குகள் ஏற்ற தனி பிளாட்பாரம் வசதியும், லாரிகள் நேரடியாக செல்ல சாலை வசதியும் ரயில்வே நிர்வாகம் செய்து கொடுத்தது.ஆறு மாதத்திற்கு முன் குஜராத் மாநிலத்துக்கு சவுக்கு கட்டைகள் ஏற்றினர். இரண்டாவது முறை ஏற்றும் போது உள்ளூர் மக்கள் தங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமென தகராறு செய்ததால் சவுக்கு கட்டை ஏற்றும் பணி பாதிக்கப்பட்டது. அதன் பிறகு இங்கிருந்து சரக்குகள் ஏற்றப்படவில்லை. சவுக்கு வியாபாரிகள் கடலூர் முதுநகருக்கு கட்டைகளை எடுத்துச் சென்றதால் கூடுதல் லாரி வாடகையால் சிரமப்பட்டனர். சரக்கு ஏற்றுவதற்காக கட்டப்பட்ட 1 கி.மீ., தூர பிளாட்பாரம் காலை, மாலை நேரங்களில் வாக்கிங் செல்பவர்களுக்கே பயன்பட்டது.இந்நிலையில் தனியார் சர்க்கரை ஆலையில் இருந்து சரக்கு ரயிலில் 43 பெட்டிகளில் 2,650 டன் சர்க்கரை ஏற்றப்பட்டு ஒடிசா மாநிலத்தில் உள்ள குட்கார் என்ற ஊருக்கு அனுப்பும் பணி துவங்கியது.நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சர்க்கரை மூட்டைகளை ஏற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து சவுக்கு கட்டைகள் உள்ளிட்ட அனைத்து சரக்குகளையும் இங்கிருந்து ஏற்றிச்செல்ல ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ