மார்க்கெட் கமிட்டிகளில் வேர்க்கடலை வரத்து குறைந்தது; விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் காரணமா
வேர்க்கடலை எண்ணெய்வித்து பயிர்களில் ஒன்று. சமையல் எண்ணெய்க்காக அதிகளவு பயன்படுத்தினாலும், பருப்பு வகைகளைஎடுத்துக்கொண்டால் பல்வேறு பயன்பாடுகள் உள்ளன. வேர்க்கடலை சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன.அவை புரதம், நார்சத்து,கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் ஈ மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கடலுார் மாவட்டத்தில் கடலுார், பண்ருட்டி, வடலுார், நெய்வேலி, விருத்தாசலம் பகுதிகளில் வேர்க்கடலை 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்படுகிறது.மார்ச் முதல் வேர்க்கடலை அறுவடைக்கு வருகிறது. விவசாயிகள் சரியான எடை, அதிகபட்ச விலை ஆகியவற்றை நேரடியாகஅடைவதற்காக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் (மார்க்கெட் கமிட்டி) உள்ளன. இவற்றில்இ-நாம் மூலம் விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு அதிகபட்ச விலை கிடைக்கிறது. தற்போது வேர்க்கடலை சராசரி விலையாக 80 கிலோ 6257 ரூபாய்க்கு விற்பனையாகிறது.உதாரணமாக கடலுார் மார்க்கெட் கமிட்டியில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான வேர்க்கடலை வரத்து இருந்தது. அதிகபட்சமாக சாலை வரைக்கூட லாட்டுகள் எண்ணிக்கை நீண்டு வந்தது. இவை அண்மைக் காலமாக மார்க்கெட் கமிட்டிக்கு வரத்து குறைந்தது. வேர்க்கடலை மூட்டை வருவதே அரிதான விஷயமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது, வேர்க்கடலை செடியில் இருந்து பிரித்து எடுத்து அதை மீண்டும் வெயிலில்உலர்த்தி ஒரு குறிப்பிட்ட காய்ச்சல் இருக்கும்போது அதெற்கென உள்ள மில்லில் உள்ள இயந்திரத்தின் உதவியால் பிரித்தெடுத்து பருப்பை மட்டும் மூட்டையாக விற்பனை செய்வது வழக்கம்.தற்போது பிரித்தெடுக்கும் இயந்திரம் முள்ளோடை, பச்சையாங்குப்பம் உள்ளிட்ட சில இடங்களில் உள்ளன. அதேப்போல பண்ருட்டி,விருத்தாசலம் போன்ற பகுதிகளிலும் உள்ளன. இங்கு வேர்க்கடலை மேல் தோலை பிரித்தெடுக்கும்போது, அங்கேயே குறைவான விலையில் விவசாயிகள் கொடுத்துவிட்டு சென்று விடுகின்றனர்.மார்க்கெட் கமிட்டிக்கு வருவதென்றால் மில்லில் இருந்து வாகன வாடகை, எடை போட்டு சாக்குமாற்றுவது, நல்ல விலை கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகும்.இதை தவிர்ப்பதற்கு வந்த வரை லாபம் என கருதி விவசாயிகள் குறைந்த விலையிலேயே வேர்க்கடலையை விற்பனை செய்துவிட்டுசென்று விடுகின்றனர். தற்போது உள்ள சூழ்நிலையில் மார்க்கெட்டில் சமையல் எண்ணெய்யில் அதிகளவு கலப்படம் இருப்பதால்மீண்டும் மக்கள் செக் எண்ணெய்க்கே செல்லும் சூழல் உள்ளது. கடலுார் மாவட்டத்தில் மீண்டும் செக்கு எண்ணெய் தயாரிப்பாளர்கள்அதிகரித்து வருகின்றனர். இவர்களும் இ-நாமில் பங்கேற்காமல் நேரடியாக மில்லிற்கே சென்று வேர்க்கடலை மூட்டைகளைகொள்முதல் செய்கின்றனர்.இதன்காரணமாக வேர்க்கடலை மார்க்கெட் கமிட்டிக்கு வரத்து குறைந்துவிட்டது. இதற்காக அதிகாரிகளும் நடவடிக்கைகள் எடுப்பதில்லை. இது குறித்து மார்க்கெட் கமிட்டி அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடலுார் மாவட்டத்தில் அறிவிக்கை விடப்பட்ட நெல், வேர்க்கடலை உள்ளிட்ட 15 விளைபொருட்கள் உள்ளன. வேர்க்கடலையும் அதில்தான் அடங்கும். இது ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்ய அந்தந்த கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரைவழங்கப்பட்டுள்ளது. இவையில்லாமல் ஆங்காங்கே சென்று வாகன சோதனை மேற்கொள்வது போன்றவை செய்யப்பட்டு வருகின்றன என்றார்.