| ADDED : டிச 04, 2025 05:23 AM
கடலுார்: அரசு கல்லுாரி மாணவர்கள் விடுதியில் முறையாக உணவு வழங்காததைக்கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலுார் அரசு பெரியார் கலைக்கல்லுாரி அருகில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் உள்ள கல்லுாரி மாணவர்கள் சமூக நீதி விடுதியில், 80க்கும் மேற்பட்டோர், தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்த விடுதியில் முறையாக உணவு வழங்கப்படவில்லை எனக்கூறி, மாணவர்கள் நேற்று காலி பாத்திரங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த தேவனாம்பட்டினம் போலீசார் மற்றும் தாசில்தார் மகேஷ், நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது விடுதிக்கு வார்டன் முறையாக வருவதில்லை, இருக்கும் ஒரே ஒரு சமையலரும் நேரத்திற்கு வந்து உணவு சமைத்து தருவதில்லை. இதனால் மாணவர்கள் பட்டினியோடு கல்லுாரிக்கும், தேர்வுக்கு செல்ல வேண்டிய அவலநிலை உள்ளதாக புகார் தெரிவித்தனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையேற்று மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கல்லுாரிக்கு சென்றனர்.