| ADDED : ஜன 18, 2024 03:51 AM
கடலுார்: 'அரசியலில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுவேன்' என, அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்தார்.கடலுாரில் அவர் அளித்த பேட்டி:தமிழக அரசியலில், நானும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம். தமிழக மக்களுக்கு எதிராக செயல்படும் அரசியல் கட்சிகளுடன் அ.ம.மு.க., கூட்டணி வைக்காது.கடந்த காலங்களில் ஸ்டெர்லைட் ஆலை, ஹைட்ரோகார்பன் திட்டம் போன்றவற்றில் மக்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டது. அதனால் பா.ஜ.,வை எதிர்த்து வந்தேன். தற்போது அந்த நிலைப்பாட்டில் இருந்து மாறிவிட்டதால் மத்திய பா.ஜ.,வுக்கு எதிர்ப்பு காட்டவில்லை. கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன்.காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்தை தமிழக கவர்னர் ரவி வெளியிட்டுள்ளார். அவர் கவர்னர் போல் செயல்படவில்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, அவரை திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.