கழற்றிவிட்ட அதிகாரிகள் பி.ஆர்.ஓ., லபோ திபோ
மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில், கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் 'பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' நிகழ்ச்சி, சமீபத்தில் நடந்தது. கலெக்டர் வருகைக்காக, இணை இயக்குனர் உள்ளிட்ட மருத்துவத்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள், மருத்துவமனை நுழைவு வாயிலில் காத்திருந்தனர். அப்போது, பி.ஆர்.ஓ., வும் பைக்கில் அங்கு வந்தார்.நிகழ்ச்சி குறித்து பி.ஆர்.ஓ., விடம், அதிகாரிகள் பேசிக்கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் கலெக்டர் கார் மருத்துவமனைக்குள் வந்ததும், அதிகாரிகள் அங்கிருந்து திடீரென காரில் எஸ்கேப் ஆகினர்.நீண்ட நேரமாகியும் விழா குறித்து தகவல் தெரிியாமல் பி.ஆர்.ஓ., அதே இடத்தில் நின்றிருந்தார். பின்னர் விசாரித்தபோது, மருத்துவமனை பின்புறம் உள்ள ஆடிட்டோரிய கட்டடத்தில் விழா நடப்பதாகவும், அங்குதான் அதிகாரிகள் அனைவரும் சென்றுவிட்டனர் என தெரிவித்தனர்.விழா மேடைக்கு கலெக்டர் வந்துவிட்ட பிறகும், நிகழ்ச்சியை மைக் பிடித்து துவக்கி வைக்க ஆளில்லை. அப்போதுதான் அதிகாரிகளுக்கு பி.ஆர்.ஓ., ஞாபகம் வந்து, அவரை தேடியுள்ளனர். அந்த நேரத்தில், பி.ஆர்.ஓ., வும் அவசர அவசரமாக பைக்கில் அங்கு வந்து சேர்ந்தார்.அவரிடம் நிகழ்ச்சியை துவக்கி வைக்க அதிகாரிகள் கூறினார். ஏற்கனவே, கடுப்பில் இருந்த பி.ஆர்.ஓ., 'உங்களிடம் தானே பேசிக்கொண்டிருந்தேன், சொல்லாமல் வந்துவிட்டீர்களே, இதுதான் மரியாதையா' என, 'லபோ திபோ'வென மேடையிலேயே சத்தம் போட ஆரம்பித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் சிலர் பி.ஆர்.ஒ., வை சமாதானப்படுத்தியதை தொடர்ந்து விழாவை துவக்கி வைத்து, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.