மருத்துவ கல்லுாரிக்கு கூடுதல் டாக்டர்கள் நியமனம் டாக்டர்கள் சங்கம் முதல்வருக்கு நன்றி
விருத்தாசலம்: கடலுார் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு, 194 மருத்துவ பணியிடங்கள் நியமித்து அரசாணை வெளியிட்ட முதல்வருக்கு, அரசு டாக்டர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில இணை செயலாளரும், விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனை மூத்த டாக்டருமான குலோத்துங்கசோழன் கூறியதாவது:சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லுாரியில், போதுமான பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், டாக்டர்கள் இல்லாத நிலை இருந்தது. இங்கு தேசிய மருத்துவ ஆணைய நெறிமுறைகளின்படி, டாக்டர்கள் நியமிக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். கடந்த ஆட்சியில் இருந்தே தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தி வந்தது.அதன் தொடர்ச்சியாக, கடந்தாண்டு டிசம்பர் 22ம் தேதி, கடலுாரில் நடந்த சங்க மாநில செயற்குழு கூட்டத்தில், தனி தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி, கடலுார் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு 194 மருத்துவப் பணியிடங்களை கூடுதலாக உருவாக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.அதில், 157 பணியிடங்கள் மருத்துவக் கல்லுாரிக்கும், 37 பணியிடங்கள் பல் மருத்துவக் கல்லுாரிக்கும் வரும்.புதிய பணியிடங்கள் வரும் பிப்., 4ம் தேதி நடைபெறும் சிறப்பு கலந்தாய்வின் மூலம் பணியமர்த்தப்பட உள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள 30 லட்சம் மக்களும்; அருகிலுள்ள மயிலாடுதுறை, அரியலுார் மாவட்ட மக்களும் பயனடைவர்.கடலுார் அரசு மருத்துவக் கல்லுாரியை அனைத்து வசதிகளும் கொண்ட மருத்துவக் கல்லுாரியாக தரம் உயர்த்திய தமிழக முதல்வர் ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன், வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு கூறினார்.