| ADDED : நவ 18, 2025 06:46 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே லோக்சபா தேர்தலை புறக்கணித்த கிராமத்தில் நடக்கவிருந்த இந்திய துணை தேர்தல் ஆணையரின் ஆய்வுப்பணி மழையால் ரத்து செய்யப்பட்டது. விருத்தாசலம் அடுத்த பரவளூர் ஊராட்சிக்கு உட்பட்ட கச்சிபெருமாநத்தம் கிராமத்தில் 700க்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். கடந்த லோக்சபா தேர்தலின்போது, கச்சிபெருமாநத்தம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் எனக் கூறி வீடுகளில் கருப்பு கொடி கட்டி, தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகம் முதல், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் வரை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. ஊராட்சி டேங்க் ஆபரேட்டர் உள்ளிட்ட இருவர் மட்டுமே ஓட்டு போட்டனர். தற்போது 2026 சட்டசபை தேர்தலுக்காக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடந்து வருகிறது. தேர்தல் புறக்கணிப்பு அறிவித்த கச்சிபெருமாநத்தம் கிராமத்தில், இந்திய தேர்தல் ஆணைய துணை தேர்தல் ஆணையர் பானுபிரகாஷ் எத்துரு நேற்று ஆய்வு செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக, கடந்த 2 நாட்களாக தீவிர திருத்தப் பணிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேரில் ஆ ய்வு செய்து, ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களின் பணிகளை முடுக்கி விட்டார். துணை தேர்தல் ஆணையர் பானுபிரகாஷ் எத்துரு, விருத்தாசலம் வருவதற்குள் நேற்று மழை பெய்ய துவங்கியது. மாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால் அவரது வருகை ரத்து செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று நடக்கும் சிறப்பு தீவிர திருத்தப் பணியை ஆய்வு செய்ய புறப்பட்டுச் சென்றார். தேர்தல் துணை ஆணையரின் வருகைக்கு பின், தனி ஊராட்சி அமையும் என காத்திருந்த கச்சிபெருமாநத்தம் கிராம மக்கள் அதிருப்தி அடைந்தனர்.