உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க எதிர்பார்ப்பு! குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க எதிர்பார்ப்பு! குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் நெல் அறுவடை துவங்கியுள்ளதால் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டுமென, குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். கடலுார் மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., ராஜசேகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பேசிய விவரம் வருமாறு: முருகானந்தன்: ஸ்ரீநெடுஞ்சேரி பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வார வேண்டும். அதிகளவு நெல்சாகுபடி செய்துள்ள கிராமங்களில் கூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வருவாய் துறையால் வழங்கப்படும் சிட்டா, அடங்கல் சான்று அந்தந்த கிராம நிர்வாக அதிகாரி மட்டுமே வழங்க வேண்டும். சேத்தியாதோப்பு சார் பதிவாளர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு அரசு வழிகாட்டு மதிப்பினை தெரிவிப்பதில்லை. அதனால் பத்திர பதிவுக்கு கூடுதல் விலைக்கு பத்திரங்களை வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மாதவன்: குமராட்சியில் முதலை பண்ணை அமைக்க வேண்டும். கடலுார் மாநகராட்சி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள கேப்பர் மலையை பாதுகாக்க வேண்டும். கடலுார் அருகே காலணி தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். ரவீந்திரன்: பயிர் கடன் வாங்கிய விவசாயிகள் கூடுதலாக கால்நடை பராமரிப்பு கடன் வாங்கினால் அதற்கு 'சிபில்' பார்க்கப்படும் என்ற அறிவிப்பு ஏற்கக்கூடியது. அந்த கடனும் எதிர்காலத்தில் கால்நடை பராமரிப்பு கடன் வழங்கும் போது, தகுதியான நபர்களை அடையாளம் கண்டு கடன் வழங்க வேண்டும். கடலுார் அடுத்த தோட்டப்பட்டு ஏரி மற்றும் வடிகால் வாய்க்காலை புனரமைத்து, மழை நீர் எளிதாக தென்பெண்ணை ஆற்றில் வடிவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேசிய அளவில் கணக்கெடுத்துக் கொண்டால் தமிழகத்தில் மட்டும் அதிதீவிர, வீரியமுடைய நச்சுத்தன்மை கொண்ட ஆறு பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அந்த தடை 60 தான் நாட்கள் மட்டுமே அமலில் இருந்தது. தடை விலகிய காரணத்தால் மீண்டும் பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாட்டை குறைக்க மாநில அளவில் கொள்கை முடிவெடுத்து, வேளாண் வல்லுநர்கள், வேளாண் அலுவலர்கள் பரிந்துரைப்படி பூச்சிக்கொல்லி மருந்துகள் வாங்கி பயன்படுத்துவதற்கான நடைமுறையை உருவாக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை