கடல் வழியாக இலங்கைக்கு பொருட்கள் ஏற்றுமதி... விரைவில்; கடலுார் துறைமுகத்தில் அடிப்படை கட்டமைப்பு தயார்
கடலுார் துறைமுகம் வங்காள விரிகுடாவில் தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரையில் உப்பனார் மற்றும் பரவனாறு ஆகிய ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள ஒரு திறந்தவெளி துறைமுகமாகும். ஆசியாவில் உள்ள பழமையான துறைமுகங்களில் ஒன்றான இது 142 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கரையிலிருந்து ஒரு மைல் துாரத்திலேயே இயற்கையாகவே 15 மீட்டர் ஆழம் இருப்பதால், கப்பல் போக்குவரத்திற்கு ஏற்றதாக உள்ளது.எல்லா காலங்களிலும் ஏற்றுமதி, இறக்குமதிக்கு உகந்த துறைமுகமாக கருதப்படுகிறது. நடுக்கடலில் நங்கூரமிட்டுள்ள கப்பல்களில் இருந்து சிறிய கப்பல்கள், மிதவைகள் மூலம் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்யலாம். கடலுார் துறைமுகத்தில் இருந்து இரும்பு தாது உள்ளிட்டபல பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.இதேபோன்று, யூரியா, டி.ஏ.பி., போன்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. கடந்த 2002ம் ஆண்டுக்கு பின் கப்பல் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது.பின், சாகர்மாலா திட்டத்தில் பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆகஸ்டு 2024 முதல் துவக்கப்பட்டு, தற்போது 150 பேர் பயணிக்கும் 'சிவகங்கை' என்ற கப்பல் வாரத்திற்கு 6 நாட்கள் (செவ்வாய் நீங்கலாக) இருவழிகளிலும் இயக்கப்பட்டு, வருகிறது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு கடல்சார் வாரியம், மாலத்தீவு, இலங்கையின் திரிகோணமலை, காங்கேசன் துறைமுகம் மற்றும் பிற இடங்களுக்கு கடலுார், துறைமுகத்தில் இருந்து சிறிய கப்பல், தோணிகளை இயக்கி சரக்கு கையாள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இது தொடர்பாக அண்மையில், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலுார் துறைமுகம் வழியாக ஏற்றுமதி, இறக்குமதி மேற்கொள்ளலாம். இதற்கான சதிகள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும், ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார்.அதன்படி, இலங்கைக்கு கட்டுமான பொருட்கள், சிமெண்ட், வெங்காயம், துணி வகைகள் மற்றும் இதர பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.கடலுார் துறைமுகத்தில் இருந்து ஆண்டுக்கு 75,000 மெட்ரிக் டன் சரக்குகள் கடல் வழியாக கையாள வாய்ப்புகள் இருப்பதாகவும், இது அடுத்து வரும் ஆண்டுகளில் பன்மடங்காக அதிகரிக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.ஏற்கனவே பிளையுட் தயார் செய்யும் தேக்கு மரங்கள் பர்மாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. கடலுார் துறைமுகத்தில் சிறிய அளவிலான பாய்மரக் கப்பல்கள் (தோணிகள்), மிதவைகள் கையாளுவதற்கு தேவையான அடிப்படைகட்டமைப்புகளுடன், கஸ்டம்ஸ், இமிகிரேஷன், சுகாதாரத்துறை ஆகிய துறைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலமாக விரைவில் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி பணி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.