வனவிலங்குகளால் பயிர்கள் சேதம் 50 கிராம விவசாயிகள் கவலை
சிறுபாக்கம் : சிறுபாக்கம் பகுதியில் வன விலங்குகளால் பயிர்கள் சேதமடைந்து வருவதால், 50 கிராம விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.சிறுபாக்கம் அடுத்த கிருஷ்ணாபுரம் அரசு வனப்பகுதி அமைந்துள்ளது. வனப்பகுதியொட்டி வேப்பூர், காட்டுமயிலுார், அடரி, மாங்குளம், சிறுபாக்கம், கீழ்குப்பம், நரையூர், அரசங்குடி உள்ளிட்ட 50 கிராம விவசாயிகளின் மானாவாரி மற்றும் திறந்தவெளி கிணறு பாசன தினங்களும் அமைந்துள்ளன.நிலப்பகுதியில் விவசாயிகள் மரவள்ளி, மக்காச்சோளம், கரும்பு, வேர்க்கடலை பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். வனப்பகுதியில் உள்ள மான், காட்டுப்பன்றிகள், மயில்கள் வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களில் விவசாயிகள் பயிர் செய்துள்ள பயிர்களை அழித்து நாசம் செய்கின்றன.இதனால் விவசாயிகள் உரம், விதை, உழவு உள்ளிட்ட அதிக செலவு செய்து சாகுபடி செய்த பயிர்களை வனவிலங்குகள் அழிப்பதால் கவலை அடைந்துள்ளனர். தொடர் பாதிப்புகளால் பெரும்பாலான விவசாய நிலங்களை தரிசாக போட்டுவிட்டு கேரளா, பெங்களூரு போன்ற நகர பகுதிகளுக்கு வாழ்வாதாரம் தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.பல ஆண்டுகளாக இதே நிலை நீடிப்பதால் அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வனப்பகுதியில் இருந்து விலங்குகள் வெளியேறாமல் தடுப்பு வேலி அமைத்து, வனவிலங்குகளை பாதுகாக்கவும் விவசாயிகளின் வாழ்வாதாரமான விவசாய பயிர்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.