பயிர் சாகுபடி செய்ய விவசாயிகள்... சுணக்கம்; அடிக்கடி மிரட்டும் மழையால் அச்சம்
கடலுார்: கடலுார் மாவட்டத்தில், மழை வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு வரும் நிலையில், கடந்த 2 நாட்களாக லேசான துாரல் மழை பெய்து வருவதால் விவசாயிகள் பயிர் செய்ய சுணக்கம் காட்டி வருகின்றனர்.தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபரில் துவங்கி, டிசம்பர் வரை நீடிக்கும். இந்த ஆண்டு பருவ மழையின்போது ஏற்பட்ட பெஞ்சல் புயல், காற்றழுத்த தாழ்வு நிலை ஆகியவற்றால் அதிகளவு மழையை கொடுத்தது. அதனால் டிசம்பர் மாதத்தில் பெய்ய வேண்டிய இயல்பு மழையை விட கூடுதலானது.அக்டோபரில் 220 மி.மீ., மழை பொழிவதற்கு 213.36 மி.மீ., மட்டுமே பெய்தது. இதில் 7 மி.மீ., குறைவாக பெய்துள்ளது.கனமழை பெய்யக்கூடிய நவம்பர் மாதத்தில் 295.30 மி.மீட்டருக்கு, 211.84 மட்டுமே பெய்துள்ளது. ஆனால் டிசம்பர் மாதத்தில் 182.30 மி.மீட்டருக்கு இதுவரை 174.08 மழை பெய்துள்ளது. நவம்பர் 25ம் தேதி உருவான பெஞ்சல் புயல் காரணமாக கடலுார், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் புதுச்சேரி 50 செ.மீ., கடலுார் 25 செ.மீ., மழை கொட்டி தீர்த்தது. இதனால், கடலுார் மாவட்டத்தில் டிசம்பர் மாத சராசரி மழையவை எட்டிப்பிடித்தது.அதே சமயத்தில் மழை மற்றும் புயல் காரணமாக கடலுார் மாவட்டத்தில் பெருவெள்ளம் தென்பெண்ணை, கெடிலம் ஆற்றில் கரைபுரண்டு ஓடியது. இந்த மழையால் மாவட்டம் முழுவதும் விவசாய பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், பயிர் சாகுபடி செய்வது காலதாமதமாகி வருகிறது.இந்நிலையில், வெள்ள பாதிப்பு குறைந்து சகஜ நிலை திரும்பி வருகிறது. மழை, வெள்ளம் ஓய்ந்ததால் விவசாயிகள் காய்கறி, மணிலா, புஞ்சையில் பயிர் செய்யும் பயிர்களை நேரத்தோடு பயிர் செய்ய நிலத்தை ஏர் உழுவது, எருகு அடிப்பது உள்ளிட்ட நிலத்தை தயார் படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையே கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் லேசான மழை பெய்தது. மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் விவசாயிகளுக்கு மீண்டும் அச்சம் ஏற்பட்டுள்ளது. மணிலா, காய்கறி பயிர்கள் நடவு செய்தது முதல் மழை பெய்ததால் பெருத்த நஷ்டம் ஏற்படும்.குறிப்பாக மணிலா விதை போடப்பட்டப்பின் நிலத்தில் மழை பெய்தால் விதை அழுகி வீணாகிவிடும். இதில் மணிலா விதை விலை அதிகமாக இருப்பதால் விவசாயிகளுக்கு அதிகளவு இழப்பு ஏற்படும்.அதேபோல் காய்கறி பயிர்கள் நடவு செய்த பின் மழை பெய்தால் பயிர்கள் வீரியமாக வளர்ச்சி பெறாது. எனவே சாகுபடிக்கு பின் மழை பெய்யாமல் இருந்தால்தான் பயிர்கள் செழித்து வளரும். இந்நிலையில் நேற்று திடீரென மழை பெய்து விவசாயிகளை மிரட்டியது. இதனால் விவசாயிகளுக்கு நிலத்தை உழவும், மணிலா விதை போடவும், காய்கறி நடவு செய்யவும் சுணக்கம் காட்டி வருகிருகின்றனர்.