உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மூழ்கிய 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் விவசாயிகள் கவலை

 மூழ்கிய 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் விவசாயிகள் கவலை

தொ டர் மழை காரணமாக புதுச்சத்திரம் பகுதியில், 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடலுார் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த பூவாலை, வயலாமூர், அலமேல்மங்காபுரம், பால்வாத்துண்ணான், அருண்மொழி தேவன், ஆதிவராகநல்லுார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, சம்பா சாகுபடிக்கு நேரடி நெல் விதைப்பு செய்தனர். கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக, இப்பகுதியில் உள்ள நிலங்களில் தண்ணீர் தேங்கியது. இந்நிலையில் நெய்வேலி என்.எல்.சி., சுரங்கத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால், பரவனாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து, அருகில் உள்ள நிலங்களில் தண்ணீர் தேங்கி, 2 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் பயிரிட்டுள்ள, நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இன்னும் சில வாரங்களில் சூல் பருவத்திற்கு வரும் நிலையில் இருந்த, நெற்பயிர்கள் மூழ்கியதால் செலவு செய்த பணம் வீணாகி பாதிப்பு ஏற்படுமோ என, இப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த பரங்கிப்பேட்டை வேளாண் உதவி இயக்குனர் நந்தினி, வேளாண் அலுவலர் வீரமணி, துணை வேளாண் அலுவலர் சிவசங்கர், உதவி வேளாண் அலுவலர்கள் மணி வாசகம், பிரேமலதா, பிரபு, பயிர் அறுவடை பரிசோதனையாளர் சுபாஷ் உள்ளிட்ட பலர் மூழ்கிய நெல் பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், 'கடந்தாண்டு என்.எல்.சி., நிதி உதவியுடன் ரூ.50 கோடி செலவில், 7 கி.மீ., தொலைவிற்கு பரவனாறு துார்வாரப்பட்டது. ஆனால் மீதமுள்ள 7 கி.மீ., அளவிற்கு துார்வாரப்படாததால், வெள்ள காலங்களில் தண்ணீர் வடியாமல், அருகில் உள்ள வயல்கள் தேங்கி விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே மீதமுள்ள, 7 கி.மீ., துாரத்திற்கு, துார்வாரப்படாமல் உள்ள, பரவனாற்றை துார்வார அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை