மேலும் செய்திகள்
டெல்டாவில் பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு
15-Dec-2024
கடலுார்; மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குமராட்சி ஒன்றியம், சிறகிழந்தநல்லுார் புதுதெரு, காலனி தெரு, நடுத்திட்டு, சர்வஜான்பேட்டை, குடிகாடு கிராமம் ஆகிய இடங்களில் நடந்து வரும் நிவாரணப்பணிகள் குறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று ஆய்வு செய்தார்.இது குறித்து அவர், கூறியதாவது; கடந்த மூன்று நாட்களுக்கு முன், காட்டுமன்னார்கோவில், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கூடுதலான மழைநீர் வீராணம் ஏரியை வந்தடைந்தது.வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால், வி.என்.எஸ்.ஓடை மற்றும் வெள்ளியங்கால் ஓடை வழியாக நீர் வெளியேற்றப்பட்டது. ஓடையின் கொள்ளளவை விட அதிக நீர்வரத்து இருந்ததால், மழைநீர் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களை சூழ்ந்து, பாதிக்கப்பட்டது.தற்போது வீராணம் ஏரியிலிருந்து நீர் வெளியேற்றுவது குறைக்கப்பட்டதால், குடியிருப்பு பகுதிகளில் நீர் வடிந்து வருகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டது. குடியிருப்புகளில் தங்கியவர்களுக்கு பொது சமையலறை ஏற்படுத்தி, உணவு தயாரித்து, வாகனங்கள் மூலம் சென்று வழங்கப்பட்டது.மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பருவமழை பாதிப்பினை தொடர்ந்து கடந்த 3 நாட்களில் 30 நிவாரண முகாம்கள் துவக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட இடங்களில் 51 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 6,732 பேர், சிகிச்சை பெற்றனர்.திருநாரையூர் குடியிருப்பு பகுதிகளில் சேதமடைந்த மின் விளக்குகள், குடிநீர் குழாய்கள், பொது கழிவறைகளை செப்பனிடவும், பள்ளி வளாகங்களை துாய்மைப்படுத்திடவும், சேதம் அடைந்த வீடுகளைக் கண்டறிந்து கணக்கெடுத்து உரிய நிவாரணம் கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, கலெக்டர் தெரிவித்தார்.ஆய்வின் போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன், உதவி ஆணையாளர் சந்திரகுமார், குமராட்சி தாசில்தார் சிவகுமார், பி.டி.ஓ., சரவணன் உடனிருந்தனர்.
15-Dec-2024