புனித பயணத்திற்கு நிதி; விண்ணப்பம் வரவேற்பு
கடலுார்; கடலுார் மாவட்டத்தில் புத்த, சமண மற்றும் சீக்கியர்கள் புனித பயணத்திற்கு செல்ல அரசு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். அவரது செய்திக்குறிப்பு: தமிழக அரசு புத்த மதத்தினர் 50 பேர், சமண மதத்தினர் 50 பேர், சீக்கியர்கள் 50 பேர் என இந்தியாவில் உள்ள புனித தலங்களுக்கு புனித பயணம் செல்ல அரசு நிதி உதவி செய்கிறது. புனித பயணத்திற்கு ஒருவருக்கு 10,000 ரூபாய் வீதம் நிதி உதவி அளிக்கப்படுகிறது. புனித பயணம் செல்பவர்களுக்கு இ.சி.எஸ்., முறையில் நேரடியாக மானியம் வழங்கப்படும். புனித பயணம் செல்ல விரும்புவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் பிரிவு அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்கள் பெறலாம். அல்லது www.bcmbcmw.tn.gov.inஇணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் நவ., 30ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் சென்னை, சேப்பாக்கம் சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.