கல்லுாரிகளுக்கு இடையிலான கபடி போட்டி காட்டுமன்னார்கோவில் கல்லுாரி வெற்றி
சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், இணைவு கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி போட்டி 3 நாட்கள் நடத்தப்பட்டது. கடலுார், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த 18 கல்லுாரிகளை சேர்ந்த ஆண்கள் மற்றும் 15 கல்லூரிகளை சேர்ந்த பெண்கள் அணியினர் பங்கேற்று விளையாடினர்.ஆண்கள் பிரிவில் காட்டுமன்னார்கோவில் அரசு கல்லூரி மாணவர்கள் முதலிடத்தையும், ஏ.வி.சி., மயிலாடுதுறை அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தது. பெண்கள் பிரிவில் மயிலாடுதுறை ஞானாம்பிகை அரசு கல்லூரி முதல் இடம், அண்ணாமலை பல்கலைக்கழக அணி இரண்டாம் இடம் பிடித்தது.3 ம் நாள் நடந்த மண்டல அளவிலான ஆண்கள் போட்டியில் ஏ.வி.சி., மயிலாடுதுறை அணி முதலிடம், காட்டுமன்னார்கோயில் அரசு கல்லூரி இரண்டாம் இடத்தையும், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி மற்றும் கள்ளக்குறிச்சி அரசு கலை கல்லூரி ஆகிய இரு அணிகள் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.இப்போட்டிகளில் சிறப்பாக விளையாடிய விளையாட்டு வீரர்கள், அண்ணாமலை பல்கலைக்கழக அணிக்காக தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் தென் மண்டல பல்கலைக்கழக கபடி விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். போட்டியின் ஒருங்கிணைப்பாளரும், காட்டுமன்னார்கோயில் அரசு கல்லூரி உடற்கல்வித்துறை இயக்குனர் சரவணன் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். வெற்றி பெற்ற அணிகளுக்கு, அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வித்துறை இயக்குநர் ராஜசேகரன், இணை இயக்குநர் வெங்கடாஜலபதி ஆகியோர் பரிசு வழங்கினர். ஒருங்கிணைப்பாளர் சரவணன், உடற்கல்வி இயக்குநர்கள் ராஜமாணிக்கம், இளவரசி, ஜோதி பிரியா, பண்பில்நாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.