உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காட்டுமன்னார்கோவில் வாலிபர் கொலை வழக்கு: 5 பேர் கைது இன்ஸ்., உட்பட 3 பேர் சஸ்பெண்ட்

காட்டுமன்னார்கோவில் வாலிபர் கொலை வழக்கு: 5 பேர் கைது இன்ஸ்., உட்பட 3 பேர் சஸ்பெண்ட்

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் வாலிபர் கொலை வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த கோவில் பத்து, மணலி பகுதியைச் சேர்ந்தவர் குமார் மகன் பிரவீன்ராஜ்,24; கூலித் தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த அவரை 10 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்து தப்பியது. பிரேத பரிசோதனைக்கு பின், நேற்று உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. புகாரின் பேரில், காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து, மணலி பகுதியைச் சேர்ந்த சிவராஜ் உட்பட 5 பேரை நேற்று பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த 6ம் தேதி பிரவீன்ராஜ் அதே பகுதியில் பைக்கை வேகமாக ஓட்டினார். இதனை அதே பகுதியைச் சேர்ந்த சிவராஜ், 20; சக்திவேல்,20; தட்டிக் கேட்டதால் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அவர், இருவரையும் பேனா கத்தியால் கிழித்துள்ளார். இதையடுத்து சிவராஜ், மணலி பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்கள் சக்திவேல், மணிகண்டன்,19; கவியரசு, 21; மற்றும் சிலர் சேர்ந்து பிரவீன்ராஜை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்து, தலைமறைவான ஆதவன், குட்டி ஆகியோரை தேடி வருகின்றனர்.

இன்ஸ்., உட்பட 3 பேர் 'சஸ்பெண்ட்'

பிரவீன்ராஜ் தாக்கியது தொடர்பாக கடந்த 7ம் தேதி காட்டுமன்னார்கோவில் போலீஸ் ஸ்டேஷனில் சிவராஜ் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. வழக்கு பதிவு செய்யாமல் அலட்சியம் காட்டியதாக இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன், கொலை சம்பவத்தை தாமதமாக தகவல் தெரிவித்த தனிப்பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோரை சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., திஷா மித்தல் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ