மேலும் செய்திகள்
ஆசிரியர் தின விழா; பள்ளிகளில் கொண்டாட்டம்
05-Sep-2025
நடுவீரப்பட்டு அடுத்த கொடுக்கன்பாளையம் ஊராட்சியில் கடந்த 1950ம் ஆண்டு அரசு துவக்கப் பள்ளி துவங்கப்பட்டது. இங்கு, ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 2 ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்தனர். பொதுமக்கள், ஊராட்சி தலைவர், ஆசிரியர்களின் கூட்டு முயற்சியால் 2007ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 2014-15ம் கல்வியாண்டில் பள்ளியில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 90 ஆக இருந்தது. அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்களின் முயற்சியால் தற்போது 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பெற்றோர் தங்களின் 5வயதுக்குட்பட்ட குழந்தைகளை, மழலையர் வகுப்பில் சேர்க்க விரும்பினர். இதன் காரணமாக பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் குழுவினர், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், கல்வி ஆர்வலர்களின் முயற்சியால் 2015-16ம் கல்வி ஆண்டு முதல் மழலையர் கல்வி வகுப்புகள் மற்றும் ஆங்கில வழிக்கல்வி துவங்கப்பட்டது. கடலுார் ஒன்றியத்திலேயே ஆங்கில வழிக்கல்வியில் சிறந்து விளங்கும் பள்ளியாக திகழ்கிறது. பள்ளி பெற்ற விருதுகள் இப்பள்ளிக்கு 2016-17ம் கலெக்டர் மூலமாக துாய்மைப்பள்ளி விருது வழங்கப்பட்டது. 2018-19ம் கல்வியாண்டில் சிறந்த பள்ளிக்கான விருது, சமக்ரா திட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்டது. 2019--20ம் கல்வி ஆண்டில் சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது. 2022ம் ஆண்டில் சுகாதாரத் துறை சார்பில் புகையிலை இல்லா வளாகப் பள்ளிக்கான மாநில அளவிலான விருதை, அமைச்சர் சுப்ரமணியன் வழங்கினார். மாணவர்கள் சாதனைகள் மாணவி கனிஷ்கா 2023ம் ஆண்டு மத்திய எரிசக்தி அமைச்சகம் மூலம் சென்னையில் நடந்த மாநில அளவிலான ஓவியப் போட்டியில் 30 ஆயிரம் ரூபாய் பரிசு வென்றார். பின், டில்லியில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார். 8ம் வகுப்பு மாணவர் ஹரிகுமார், 6ம் வகுப்பு மாணவி ஹரிணி ஆகியோர் கராத்தே, சிலம்பம் போட்டிகளில் மாநிலம் மற்றும் தேசிய போட்டிகளில் பரிசுகள் குவித்தனர். 2024-25ம் கல்வி ஆண்டில் மாணவி புவனேஸ்வரி, மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டியில் முதல் பரிசு பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார். 2019ம் ஆண்டு மாணவர்கள் சரண், பாரதிதாசன், தினேஷ் ஆகியோர் சிறந்த அறிவியல் படைப்பிற்கான இன்ஸ்பயர் விருது பெற்றனர். 2017ம் ஆண்டில் மாநில அளவில் மாணவர் வசந்தகுமார் இம்பார்ட் தேர்வில் முதலிடம் பிடித்தார். மாணவர்கள் நலனில் அக்கறை தனியார் பள்ளிகளுக்கு இணையாக இப்பள்ளியில் சிறந்த கட்டமைப்பு வசதி உள்ளது. பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று, ஆங்கில வழிக் கல்வி துவங்கப்பட்டது. ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் மாணவர்கள் நல்லொழுக்கத்துடன் கல்வியில் முன்னேறி வருகின்றனர். பள்ளி சிறந்த நிலைக்கு வர கிராம மக்களும் உறுதுணையாக உள்ளனர். ஆசிரியர்கள் மிகுந்த ஈடுபாடுடனும், மாணவர்களின் முன்னேற்றத்தில் அதிக அக்கறையோடும் உள்ளனர். ஆசிரியர்கள் பள்ளியின் வளர்ச்சியிலும், மாணவர்களின் நலனிலும் தனிக்கவனம் செலுத்துகின்றனர். -லதா, தலைமை ஆசிரியை. முன்னோடி பள்ளி கடலுார் மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கு முன்னோடியாக திகழ்கிறது. இங்கு, பயின்ற மாணவர்கள் பலர் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர்பதவிகளில் உள்ளனர். பள்ளிக்கு தேவையான நேரத்தில் உதவிய கடலுார் குழந்தைகள் நல மருத்துவர் இளந்திரையன், மாணவர்களுக்கு நன்கொடை, பரிசு பொருள் வழங்கும் நந்தகோபால், தட்சணாமூர்த்தி, ஆனந்தன், ராகுல், ரவிச்சந்திரன் மற்றும் கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பள்ளி வளர்ச்சிக்கு அயராது பாடுபட்ட பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாயவேல், முன்னாள் தலைமை ஆசிரியர் பூமிநாதன், முன்னாள் ஆசிரியை சுந்தரி, தற்போதைய தலைமை ஆசிரியர் லதா மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். -அசோகன், கல்வியாளர். கல்விக்கு உதவுவது மகிழ்ச்சி மாணவர்களுக்கு தரமான கல்வியை ஆசிரியர்கள் வழங்குகின்றனர். மாணவர்கள் கல்வி கற்க போதிய இடவசதி இல்லாமல் அவதியடைந்தனர். இதுகுறித்து ஆசிரியர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் என்னை தொடர்பு கொண்டு ஆலோசனை செய்தனர். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பள்ளிக்கு அருகில் உள்ள எனக்கு சொந்தமான 20 சென்ட் இடத்தை பள்ளிக்கு தானமாக வழங்கினேன். -சடகோபன், நிலக்கிழார். ----- படிப்பிற்கு அடித்தளம் எனது படிப்பிற்கு அடித்தளமாக இருந்தது இப்பள்ளிதான். கல்லுாரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறேன். புத்தக அறிவை மட்டுமல்ல, வாழ்வின் மதிப்புகளையும் கற்றுக் கொண்டேன். ஆசிரியர்கள் அளித்த வழிகாட்டுதலால் எனது தன்னம்பிக்கை பெருகியது. மேடை பேச்சு, கவிதை வாசிப்பு, நாடகங்களில் நடிப்பு ஆகியவற்றில் பங்கேற்றதன் மூலம் எனது திறமைகளை அறிந்தேன். எனது கிராமத்திற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்க்கும் வகையில், சமுதாயத்திற்கு நேர்மையாக சேவை செய்ய விரும்புகிறேன். -ரூபிணி, முன்னாள் மாணவி. ------------- தன்னிகரற்ற பள்ளி இங்கு ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை படித்ததை பெருமையாக கருதுகிறேன். வேதியியல் பாடத்தில் இளங்கலை பட்டம் மற்றும் கல்வியியல் பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். இப்பள்ளி ஆசிரியர்கள் போல சிறந்த ஆசிரியராக பணியாற்றுவதற்கு பயிற்சி பெற்று வருகின்றேன். இப்பள்ளி கல்வியிலும் ஒழுக்கத்திலும் தன்னிகரற்று விளங்குகிறது. -உமா மகேஸ்வரி, முன்னாள் மாணவி. கற்றுக் கொடுப்பது தவம் கல்வி என்பது கடல். கல்வியை கற்றுக் கொடுப்பது தொழில் அல்ல தவம் என்று கருதுகிறேன். மாணவர்களுக்கு அறிவியல் வளர்ச்சி, பண்பாடு, ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்புகளையும் கற்றுக் கொடுக்கிறேன். மாணவர்களின் நிலைக்கு ஏற்ப அவர்களிடம் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வருகிறேன். -கலாமணி, இடைநிலை ஆசிரியர். ------------ சிறந்த எதிர்காலம் ஆசிரியர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் ஒவ்வொரு மாணவர்கள் மீது தனிக்கவனம் செலுத்துகின்றனர். மாணவர்கள் திறமைகளை வளர்த்து வருகின்றனர். மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கான அடித்தளமாக உள்ளது. -கலைவாணி, பெற்றோர், குமளங்குளம். ------- பள்ளி வளர்ச்சிக்கு உறுதுணை கல்வியால் மட்டுமே சமூகத்தில் மாற்றம் கொண்டு வர முடியும். கல்வியுடன், தனிமனித ஒழுக்கத்தையும் கொண்டு வருவதே சிறந்த கல்வி. ஒவ்வொரு ஆசிரியரும் கனவு ஆசிரியர்களாக மாணவர்களின் மனதில் உள்ளனர். பள்ளி வளர்ச்சிக்கு சக ஆசிரியர்களுடன் பணிபுரிகிறேன். -கார்த்திகா, இடைநிலை ஆசிரியர். மாணவர் சேர்க்கைக்கு பாடுபடுவேன் தலைமை ஆசிரியருடன் இணைந்து மாணவர் சேர்க்கையை உயர்த்த ஒவ்வொரு ஆண்டும் முயற்சி மேற்கொண்டு வருகிறேன். மாணவர்களின் வளர்ச்சியில், குழந்தை பருவத்தில் இருந்தே அவர்களுக்கு நல்லொழுக்கம், நற்சிந்தனைகளை கதைகள், பாட்டு மூலமும் எடுத்துக் கூறி முன்னேற செய்கிறேன். -சுஜாதா, இடைநிலை ஆசிரியர். மாணவர்கள் ஊக்குவிப்பு மாணவர்களை பல்வேறு துறைகளில் ஊக்குவித்து அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் முயற்சிகளை மேற்கொள்கிறேன். தமிழக அரசின் கலைத் திருவிழா போட்டிகளில், மாணவர்களை வெற்றி பெறச் செய்தேன். -சித்ரா, பட்டதாரி ஆசிரியர்.
05-Sep-2025