கருகும் குறுவை நெற்பயிர்கள்; விவசாயிகள் கவலை
பெண்ணாடம் : பெண்ணாடம் பகுதியில் நடவு செய்துள்ள குறுவை நெற்பயிர்கள் கருகி வருவதால், மகசூல் குறையும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள அரியராவி, மாளிகைக்கோட்டம், திருமலை அகரம், இருளம்பட்டு, கொசப்பள்ளம், இறையூர், கொத்தட்டை, பெ.கொல்லத்தங்குறிச்சி, துறையூர் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கு முன் ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை நெல் நடவு செய்தனர்.நெற்பயிர்களும் செழிப்பாக வளர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக நெற்பயிர்களின் நுனி பகுதியில் மஞ்சள் நிற மர்மநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மகசூல் பாதிக்கும் என்பதால் பெண்ணா டம் பகுதி குறுவை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இதுகுறித்து பெண்ணாடம் பகுதி கிராம விவசாயிகள் கூறுகையில், 'கடந்த 2 மாதங்களுக்கு முன் குறுவை நெல் நடவு செய்தோம். நெல் பயிர்களின் நுனி பகுதி காய்ந்து, மஞ்சள் நிறமாக மாறியது. தடுக்க உர கடைகளில் மருந்து வாங்கி, தெளித்தோம்.ஆனால் நோயை கட்டுப் படுத்த முடியவில்லை. தற் போது நெற்பயிர்கள் முற்றிலும் காய்ந்து வருகிறது. வேளாண் அதிகாரிகள் நெல் வயலில் ஆய்வு மேற் கொண்டு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி, நெற்பயிர்களில் நோய் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.