உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

கூடுதல் கலெக்டர் ஆய்வு

புதுச்சத்திரம் அடுத்த கீழ்பூவாணிக்குப்பம் ஊராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் சரண்யா, ஆய்வு செய்தார். அப்போது, 2024--25 திட்டத்தின் கீழ் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் கட்டப்படும் வீடுகள், அப்துல்கலாம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பசுமை வளாகம் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டார். குறிஞ்சிப்பாடி ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் வெங்கடேசன், ராமச்சந்திரன், உதவி பொறியாளர் நவீன் குமாரி, உதவி செயற்பொறியாளர் டார்வின்குமார் உடனிருந்தனர்.

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

கடலுார் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள்ஒப்புவித்தல் போட்டி, சமுதாய பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. உதவி தலைமை ஆசிரியர் ஜெயேந்திரன் தலைமை தாங்கினார். ஆசிரியை வெற்றிச்செல்வி வரவேற்றார். உலக திருக்குறள் பேரவையின் மாவட்ட தலைவர் பாஸ்கரன், வெற்றிபெற்ற மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் சான்றிதழ் பரிசு வழங்கி பாராட்டினார். ஆசிரியர் சுமதி நன்றி கூறினார்.

டெங்கு விழிப்புணர்வு

நடுவீரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் குமளங்குளம் ஊராட்சியில் டெங்கு வருமுன் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி ராஜபாஸ்கர் தலைமை தாங்கினார். ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அமிர்தாதேவி முன்னிலை வகித்தார். சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமார், சுகாதார ஆய்வாளர் குமார் தலைமையில் களப்பணியாளர்களை கொண்டு வீடு வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு, புகை மருந்து அடித்தல், நிலவேம்பு கசாயம் வழங்குதல் மற்றும் நடமாடும் மருத்துவக்குழு மூலம் டாக்டர் தீபன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

நெற்பயிர் வயல்கள் ஆய்வு

சேத்தியாத்தோப்பு அடுத்த வெய்யலுார் கிராமத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ராமதாஸ், தனது வயலில் பாரம்பரிய நெல் ரகங்களான கருப்பு கவுனி, தங்கசம்பா, ஆத்துார் கிச்சிலி சம்பா, துளசி சீரகசம்பா ஆகியவற்றை நடவு செய்துள்ளார். சிதம்பரம் கோட்ட விதைச்சான்று, அங்ககசான்று உதவி இயக்குனர் விஜயா, விதை ஆய்வாளர் சுகந்தி ஆகியோர் இந்த வயல்களை நேரடி ஆய்வு செய்தனர்.இயற்கை விவசாயி ராமதாஸிடம் வேளாண் அதிகாரிகள் பாரம்பரிய நெல் சாகுபடியில், ஈடுபொருட்களான பஞ்சகாவ்யம், மீன் அமிலம் தயாரிப்பு முறை குறித்து கேட்டறிந்தனர். விவசாயிகள் சுகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கொசுப்புழு ஒழிப்பு

குள்ளஞ்சாவடி அடுத்த வழுதலம்பட்டு ஊராட்சி, பெரியகாட்டுசாகை பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களில் புகை மருந்து அடிப்பது, பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்குவது, மழை நீர் தேங்கும் இடங்கள் குறித்த ஆய்வு உள்ளிட்ட கொசுப்புழு ஒழிப்பு பணிகளில் மருத்துவ குழுவினர் மேற்கொண்டனர். வட்டார மருத்துவ அலுவலர் ரேவதி மணிபாலன் மேற்பார்வையில், சுகாதார மேற்பார்வையாளர் கொளஞ்சியம், சுகாதார ஆய்வாளர்கள் திருமாறன், சசிதரன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ