| ADDED : பிப் 18, 2024 12:16 AM
சிதம்பரம்: சிதம்பரம் கோவில்களுக்கு கும்பாபிேஷக திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டும் என, பாண்டியன் எம்.எல்.ஏ., சட்டசபையில் கோரிக்கை வைத்தார்.சட்டசபையில் கேள்வி நேரத்தில் அவர் பேசியது:சிதம்பரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கொத்தட்டை ஊராட்சியில், சோழர்கள் காலத்திய கூத்தாண்டவர் உள்ளது. ஆண்டு தோறும் இக்கோவிலில் 18 நாட்கள் மகா பாரத கதையுடன் திருவிழா நடத்தப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருநங்கைகள் இங்கு வருவர்.இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்து 14 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், தற்போது திருப்பணிகள் நன்கொடையாளர்கள் மூலம் நடக்கிறது. இக்கோவிலை பழமை மாறாமல் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள அரசு சிறப்பு நிதி வழங்கி, விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.அதேபோன்று, சிதம்பரம் அருகே சிவபுரியில் தேவார பாடல் பெற்ற சிவபுரி உச்சிநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிேஷகம் நடந்து 16ஆண்டுகள் கடந்துள்ளது. அண்ணாமலை நகர், திருவேட்களம் பாசுபதேஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம் நடந்து 18 ஆண்டுகள் முடிந்துள்ளது. எனவே, இக்கோவில்களுக்கும் திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டும்.