பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் அவதி
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் கடைவீதியில் பஸ் ஸ்டாப்பில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் வெயிலிலும் மழையிலும் பயணிகள் நின்று சிரமம்படுகின்றனர்.கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக கடந்த 6 வருடங்களுக்கு முன்பு மந்தாரக்குப்பம் கடைவீதி பகுதியில் இருந்த சாலையோரம் இருந்த பழமை வாய்ந்த மரங்கள் மற்றும் பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டன. கடைவீதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் மேல்பாதி, பழையநெய்வேலி, கங்கைகொண்டான் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 100க்கும் மேற்பட்டோர் பஸ் ஏறி வெளியூர் சென்று வருகின்றனர். ஆனால் மந்தாரக்குப்பம் கடை வீதியில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் பெண்கள், முதியவர்கள், பொதுமக்கள் வெயில் மற்றும் மழையிலும் நின்று பெரிதும் சிரமம் அடைகின்றனர். பயணிகள் மழை மற்றும் வெயிலுக்கு பயந்து அருகில் உள்ள கடைகளில் பஸ்சுக்காக காத்து இருக்கும் போது பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிற்கமால் செல்வதால் சரியான நேரத்துக்கு பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே மந்தாரக்குப்பம் கடைவீதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.