சேதமடைந்த மலட்டாற்றின் கரையை சீரமைக்க கோரி கலெக்டரிடம் மனு
கடலுார்: கடலுார் அருகே மலட்டாற்றின் சேதமடைந்த தென்பகுதி கரையை சீரமைக்க வலியுறுத்தி கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஒன்றிய தலைவர் கடவுள் தலைமையில் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவின் விபரம்: தென்பெண்ணையாற்றின் முக்கிய கிளை நதிகளில் ஒன்றான மலட்டாறு, விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லுாருக்கு அருகில் அரசூர் வழியாக கடலுார் மாவட்டத்திற்குள் நுழைகிறது. விழுப்புரம் மாவட்டத்தின் தென்கிழக்கு பகுதியில் இருந்து, கடலுார் மாவட்டத்தின் வடமேற்கு பகுதிக்குள் பாய்ந்து மேற்கு மற்றும் மத்திய பகுதியின் வழியாக கடலுார் மாவட்டம் துாக்கணாம்பாக்கம், தென்னம்பாக்கம் வழியாக குமாரமங்கலம் அணைக்கட்டிற்கு வந்தடைகிறது. குமாரமங்கலம் கிளை வாய்க்கால் வழியாக அபிஷேகபாக்கம் ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. ஏரி நிரம்பும்போது உபரிநீர் மீண்டும் மேல்அழிஞ்சிப்பட்டு, உடலப்பட்டு அருகில் மீண்டும் மலட்டாற்றில் வெளியேற்றப்படுகிறது. கடந்த 2024ம் ஆண்டு மேல்அழிஞ்சிப்பட்டு மலட்டாற்றிற்கு மேல் நாகப்பட்டினம் புறவழிச்சாலை மேம்பாலம் அமைக்கும் போது மலட்டாற்றின் 20அடி அகலமும், 30அடி உயரமும் கொண்ட தென்பகுதி கரை 50 மீட்டருக்கும் மேல் சேதமடைந்தது. இக்கரையின் வழியாக வழிந்தோடிய வெள்ள நீரால் சுமார் 200 ஏக்கர் விளை நிலங்கள், வீடுகள் நீரில் மூழ்கின. தற்போது பருவமழை துவங்க உள்ள நிலையில் இதுவரை மலட்டாற்றின் சேதமடைந்த தென்பகுதி கரை சீர்படுத்தப்படவில்லை. மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பயிரிடப்பட்டுள்ள நுாற்றுகணக்கான ஏக்கர் நெல், மரவள்ளி, வெண்டை, கத்திரி, பூஞ்செடிகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே விவசாயிகளின் சாகுபடி பயிர்களை வாழ்வாதாரத்தை பாதுகாத்திட மலட்டாற்றின் தென்பகுதி கரையை சீர்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.