போலீஸ் நிலையம் முற்றுகை 20 பேர் மீது வழக்குப்பதிவு
கடலுார் : விபத்தில் உயிரிழந்தவருக்கு நிவாரணம் கோரி, கடலுாரில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட 20பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கடலுார் அடுத்த பச்சையாங்குப்பம் சின்ன தைக்காலை சேர்ந்தவர் ராஜேஷ் 45; கடந்த 21ம் தேதி சொத்திக்குப்பம் சாலையில் பைக் மோதி உயிரிழந்தார். கடலுார் துறைமுகம் போலீசார் வழக்கு பதிந்து, பைக் ஓட்டிய நொச்சிக்காட்டை சேர்ந்த தினேஷ்குமார் என்பவரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.இந்நிலையில் நேற்று காலை, உயிரிழந்த ராஜேஷ் உறவினர்கள் பன்னீர், ராஜி உட்பட 20 பேர் துறைமுகம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, நிவாரணம் பெற்றுத் தரக்கோரி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, போலீசாரை பணி செய்யாமல் தடுத்ததாக, பன்னீர், ராஜி மற்றும் நான்கு பெண்கள் உட்பட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.