பட்டா கேட்டு மறியல்: நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு
நெல்லிக்குப்பம்: பட்டா வழங்க வலியுறுத்தி சாலை மறியல் செய்ய மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரத்தில் புறம்போக்கு இடத்தில் பல ஆண்டுகளாக 95 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்கள் தொடர்ந்து தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டுமென போராடி வருகின்றனர். அந்த இடம் ஆங்கிலேயேர் காலத்தில் நடனபாதேஸ்வரர் கோவிலுக்கு வழங்கப்பட்டது. எனவே அது கோவிலுக்கு சொந்தமானதால் பட்டா வழங்க முடியாது என ஹிந்து அறநிலைத்துறை அதிகாரிகள் கூறி வருவதால் பட்டா வழங்காமல் உள்ளனர். இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் முன்னிலையில் கடந்த வாரம் நடந்த பேச்சுவார்த்தையில் அந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரம் உள்ளதால் பட்டா வழங்க முடியாது என செயல் அலுவலர் தேவகி கூறினார். பட்டா வழங்கும் அதிகாரம் வருவாய் துறை அதிகாரிகளுக்கே உள்ளதால் அங்கு சென்று பேசிக் கொள்ளுங்கள் என இன்ஸ்பெக்டர் கூறி அனுப்பி வைத்தார். இந்நிலையில் நேற்று காலை அப்பகுதி மக்கள் 200 க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் செய்ய குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்.டி.ஓ.,விடம் பேசி பேச்சுவார்த்தைக்கு நடவடிக்கை எடுக்கிறேன் என இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உறுதியளித்ததால் கலைந்து சென்றனர்.