| ADDED : டிச 03, 2025 06:13 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில், வடகிழக்கு பருவக்காற்று மற்றும் 'டிட்வா' புயல் காரணமாக பெய்த மழையானது, இயல்பு அளவை எட்டியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபரில் துவங்கி டிசம்பர் வரை நீடிக்கும். அதில் நவம்பர் மாதத்தில் தான் கனமழை கொட்டும். இந்த ஆண்டு அக்டோபர் 2வது வாரத்தில் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. வடகிழக்கு பருவக்காற்று துவங்கிய உடன் மழை பெய்யும் என்பதெல்லாம் காலப்போக்கில் மறைந்து வருகிறது. வங்கக்கடலில் புயல்சின்னம் உருவானால்தான் தமிழகத்திற்கு மழை என்றஅளவில் உள்ளது. ஒவ்வொரு மழைக்காலத்திலும் 7 முதல் 8 புயல் சின்னம் உருவாகி தான் மழை கொடுத்து வருகிறது. அக்டோபர் கடைசி வாரத்தில் மோந்தா புயல், நவம்பர் சென்யா, டிட்வா புயல்கள் உருவாகி மழையை கொடுத்தது. குறிப்பாக 'டிட்வா' புயல் சின்னம், தென் மாவட்டங்களில் நல்ல மழையை கொடுத்தது. அத்துடன் கடலுார் மாவட்டத்திலும் தொடர் மழைக்கு காரணமாக இருந்தது. கடலோரப்பகுதியில் உள்ள மாவட்டங்களுக்கு மட்டும் தான் மழை கொடுத்ததே தவிர உள் மாவட்டங்களில் அவ்வளமாக மழைய பெய்யவில்லை. இதுதவிர சில காற்றழுத்த தாழ்வு நிலையிலேயே வலுவிழந்தாலும் மழையை கொடுத்தது. இதன் விளைவாகத்தான் கடலுார் மாவட்டத்தில் ஓரளவு சராசரி மழையளவை எட்ட முடிந்தது. புயல் வடமாவட்டங்களுக்கு கடந்து செல்லும்போது கடலுார் மாவட்டத்திற்கு வானிலை மையம் கொடுத்த 'ரெட் அலர்ட்' அளவுக்கு மழை பெய்யாமல் வெறும் துாரல்மழையோடு நின்றுபோனது. கடலுார் மாவட்டத்தில் 10 ஆண்டு சராசரி மழையளவு 1200 மி.மீட்டர் ஆகும். அதில் வடகிழக்கு காற்றின் மூலம் 790 மி,மீ., மழை பெய்ய வேண்டும். அக்டோபர் மாதத்தில் இயல்பு மழையளவு 220 மி.மீட்டருக்கு, 213.36 மி.மீ., பெய்துள்ளது. இதில் 7 மி.மீ., குறைவாக பெய்துள்ளது. நவம்பர் மாதத்தில் 295 மி.மீ., மழைக்கு, இதுவரை 280மி.மீ., மழை பெய்துள்ளது. அதாவது இயல்பு மழையில் 92 சதவீதம் மட்டுமே மழை பெய்துள்ளது. சராசரி மழையளவை விட 8 சதவீத மழை குறைவாக உள்ளது. டிசம்பர் மாதம் 210 மி.மீ., சராசரி மழை பெய்ய வேண்டும். அதன்படி ஓரளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.