காப்பீடு தொகை குறைவாக வழங்கியதாக விவசாயிகள் குற்றச்சாட்டு! பெஞ்சல் புயல் நிவாரணம் விரைந்து வழங்க கோரிக்கை
கடலுார்; குறுவை பருவ பயிர் சாகுபடிக்கு, பயிர் காப்பீடு திட்டத்தில் இழப்பீடு தொகை முழுமையாக வழங்காமல் குறைந்த தொகை வழங்கப்படுவதாக குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகளுக்கான குறைகேட்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:* தமிழக அரசு தற்போது வனத்துறை சார்பில் பிறப்பித்துள்ள காட்டுப்பன்றி்களை கட்டுப்படுத்தும் அரசாணை விவசாயிகளுக்கு பயன்தராது. குறுவை பருவ பயிர் சாகுபடிக்கு வழங்கிய பயிர் காப்பீட்டு திட்டத்தில் இழப்பீட்டு தொகை முழுமையாக வழங்கப்படவில்லை. முழு தொகையை வரவு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.* கடந்த 2008ம் ஆண்டு முதல் உளுந்து பயிர் சாகுபடி விவசாயிகள் கைவிட்டு போயிருக்கிறது. தமிழகத்தில் உளுந்து உற்பத்தியில் கடலுார் மாவட்டம் ஏழாவது இடத்தில் இருந்தது. தற்போது 17வது இடத்தில் இருக்கிறது. விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைப்பதற்கு, உளுந்து பயிர் சாகுபடியை ஊக்குவிக்க வேண்டும்.* வெள்ளாற்று படுகைகளில் மரவள்ளி கிழங்கு அதிகமாக பயிரிடப்படுகிறது. இதனை மார்க்கெட் கமிட்டியில் கொள்முதல் செய்ய வேண்டும். மார்க்கெட் கமிட்டியில் வெளிமாவட்ட வியாபாரிகள் பொருட்களை கொள்முதல் செய்ய அனுமதிக்கக்கூடாது.* மழையால் பாதிக்கப்பட்ட நெல், மணிலா பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பண்ருட்டி அருகே திருத்துறை ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். * பெஞ்சல் புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைந்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.நிறைவாக விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பதிலளித்து பேசுகையில், விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பட்டா வழங்கப்படும்
கூட்டத்தில், கடலுார் அருகே மலையடிக்குப்பம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து விவசாயிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து டி.ஆர்.ஓ., ராஜசேகரன் பேசுகையில், 'அந்த கிராமத்தில் உள்ள 162 ஏக்கரும் அரசு நிலம். அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் அங்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கு பொதுமக்கள் மரம் நட்டு ஆக்கிரமித்துள்ளனர். இவர்களுக்கு தாசில்தார் மூலம் 20 நாட்களுக்கு முன் அறிவிப்பு செய்யப்பட்டது. அவர்கள் எதுவும் பதில் கூறாததால் தற்போது அங்கு மரங்கள் வெட்டும் பணி நடந்து வந்தது. இப்போது, அடுத்த கட்ட நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என கோர்ட் கூறியுள்ளது. இதனால், தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அங்கு வசித்து வரும் அனைவருக்கும் வீட்டிற்கான பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.