பெண்ணாடம் : பெண்ணாடம் பகுதிகளில் நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அறுவடைக்கு தயார் நிலையில் நெற்கதிர்கள் முதிர்ந்துள்ளதால் மூட்டைகள் தேக்கத்தைகட்டுப்படுத்தலாம் என தெரிவித்துள்ளனர்.மாவட்டத்தில் பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள மாளிகைக்கோட்டம், தாழநல்லுார் , கிளிமங்கலம், திருமலை அகரம், கோனுார் , வடகரை, நந்திமங்கலம், செம்பேரி, சவுந்திரசோழபுரம், இறையூர், கொத்தட்டை உட்பட 30க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா நெல் நடவு செய்துள்ளனர்.ஆண்டுதோறும் அறுவடையின் போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் முன்கூட்டியே மாவட்டத்தில் அந்தந்த முக்கிய பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பது வழக்கம். ஆனால் இந்தாண்டு இதுவரை திறக்கவில்லை. கடந்த சில தினங்களாக பெண்ணாடம் பகுதி கிராமங்களில் அறுவடை பணிகள் துவங்கி, நடந்து வருகிறது.அதன்படி, பெண்ணாடம், மாளிகைக்கோட்டம், வெண்கரும்பூர், தாழநல்லுார், திருமலை அகரம், கிளிமங்கலம், கணபதிகுறிச்சி உட்பட 20க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இதுவரை திறக்கவில்லை. திறக்கும் என்ற நம்பிக்கையில் அறுவடை பணிகளை விவசாயிகள் துவக்கி உள்ளனர். எனவே, விவசாயிகளின் நலன்கருதி, பெண்ணாடம் பகுதி கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விரைந்து திறக்க மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெண்ணாடம் பகுதி விவசாயிகள் கூறுகையில், 'வயலில் நெற்கதிர்கள் முதிர்ந்து, சாய்ந்துள்ளன. அறுவடை பணிகளை துவக்கி உள்ளோம். வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் மழைக்கு நெற்கதிர்கள் வீணாகும் வாய்ப்பு உள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களை திறந்தால் விவசாயிகள் பாதிப்புகள் குறையும். தற்போது அறுவடை பணிகளும் தீவிரமாக நடந்து வருவதால் மூட்டைகளும் அதிகளவில் கொள்முதல் நிலையம் வர வாய்ப்புள்ளன. அதிக நெல் மூட்டைகள் சேரும் முன்பு கொள்முதல் நிலையங்களை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.