| ADDED : நவ 22, 2025 05:44 AM
கடலுார்: குமராட்சி வட்டாரத்தில் சம்பா நெல் சாகுபடியில் காணப்படும் ஆனைக்கொம்பன் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த அதிகாரி ஆலோசனை வழங்கினார். குமராட்சி வட்டாரத்தில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், வீரநத்தம், எள்ளேரி, திருநாரையூர் உள்ளிட்ட கிராமத்தில் ஒரு சில இடங்களில் நெற்பயிரில் ஆனைக்கொம்பன் ஈநோய் தாக்குதல் காணப்படுகிறது. இதனை வேளாண்மை உதவி இயக்குநர் தமிழ்வேல் ஆய்வு செய்தார். அப்போது, வானம் மேக மூட்டம் காரணமாகவும், காற்றின் ஈரப்பதம் கூடுதல், தட்பவெப்ப நிலை மாறுபாடு உள்ளிட்ட காரணங்களால் இந்நோய் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க அதிகளவில் தழைச்சத்து இடுவதை தவிர்க்க வேண்டும். கொசு வகையைச் சேர்ந்த இந்த தாய்ப்பூச்சி வயல் வரப்புகளில் உள்ள களைச் செடிகளில் தங்குவதால் களைகள் இல்லாமல் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என, விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார். வேளாண்மை அலுவலர் நடராஜன் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.