உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வெளி நாடுகளுக்கு கடல் உணவு ஏற்றுமதி அதிகரிப்பு! கடந்த ஆண்டை விட 6 சதவீதம் அதிகம்

வெளி நாடுகளுக்கு கடல் உணவு ஏற்றுமதி அதிகரிப்பு! கடந்த ஆண்டை விட 6 சதவீதம் அதிகம்

கடலுார்: அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் விதித்த 50 சதவீத இறக்குமதி வரியை முறியடித்து, கடந்த ஆண்டை விட 6 சதவீதம் கடல் உணவுப் பொருட்கள் கூடுதலாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடல் வளம் நாளுக்கு நாள் குறைந்து வருவதால், மக்களின் தேவைக்கு ஏற்ப கடல் உணவு கிடைப்பதில்லை. அதனால் ஆழ்கடலில் கிடைக்கக்கூடிய இறால்களை கொண்டு வந்து அதில் இருந்து இறால் குஞ்சுகளை பண்ணைகளில் வளர்த்து விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதில் தமிழகம், ஆந்திரா, கோவா உள்ளிட்ட பல மாநிலங்கள் இறால் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளன. அதிகளவில் இறால் வளர்ப்புத்தொழில் ஆந்திரா மாநிலத்தில் நடந்து வருகிறது. இதில் இருந்து அறுவடை செய்யப்படும் இறால்கள் உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் இந்தியாவிற்கு அதிகளவில் அன்னியசெலாவனி கிடைத்து வந்தது. அமெரிக்கா அதிகளவில் இறால்களை இறக்குமதி செய்து வந்தது. இந்நிலையில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என திடீர் தடை விதித்தார். ஆனால் இந்தியாவுக்கு தொன்று தொட்டு உதவி வரும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை. அதனால் ஆத்திரமடைந்த ட்ரம்ப் இந்திய பொருட்கள் இறக்குமதிக்கு 50 சதவீதம் வரி விதித்தார். இது மிகவும் அதிகமானது. இந்தியாவில் இருந்து அதிக அளவு கடல் உணவு பொருட்களை இறக்குமதி செய்யும் நாடு அமெரிக்கா. இந்த கூடுதல் இறக்குமதி வரியால் இந்திய கடல் உணவுப்பொருட்களை கொள்முதல் செய்ய அமெரிக்கா வியாபாரிகள் விரும்பவில்லை. இதனால் இந்தியாவில் இருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் இறால்கள் தேக்கமடைந்தன. அதனால் தமிழகத்தில் இறால் விலை வீழ்ச்சி அடைந்தது. அமெரிக்காவின் தடையை பொருட்படுத்தாமல் மற்ற நாடுகளுடன் வர்த்தகம் செய்வதற்கான சூழலை பிரதமர் மோடி மேற்கொண்டார். அதன் விளைவாக தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. அமெரிக்காவை தவிர்த்து மற்ற நாடுகள் ஏற்கனவே கொள்முதல் செய்த அளவை விட கூடுதல் ஆர்டர்கள் கொடுத்தன. வியட்நாம் 105 சதவீதமும், தாய்லாந்து 36.32 சதவீதமும், ஐரோப்பிய ஒன்றியம் 32.59 சதவீதமும், சீனா 14 சதவீதம் உயர்வு என்ற அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது ஆண்டுதோறும் வழக்கமாக நாம் ஏற்றுமதி செய்யப்படும் அளவைவிட 6 சதவீதம் அதிகமாகும். இதனால் இறால் வளர்ப்போர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !