ஊதி பெரிதாக்கும் ஊடக பேரவை உள்ளடி வேலை பார்க்கும் போலி ஐ.டி.,க்கள் கவலையில் மூத்த பா.ம.க., நிர்வாகிகள்
பா .ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு, அவரவர் ஆதரவாளர்களுக்கு புதிய பொறுப்புகளை கொடுத்து தங்களது அணியை வலுப்படுத்தும் முயற்சியில் உள்ளனர். ஆனால், இருவருக்கும் இடையே பிரச்னை உருவானதும் சில மாதங்களில் சுமூக முடிவு எட்டப்படும் என பெரும்பாலான நிர்வாகிகள் எதிர்பார்த்தனர். ஆனால், இருதரப்பிலும் உள்ள சில நிர்வாகிகள் அத்துமீறிய பேச்சால் பிரச்னை நாளுக்கு நாள் பெரிதாகி இருவரும் தனித்தனியே பொதுக்குழு நடத்தும் அளவிற்கு சென்று விட்டது. அதிலும் ஊடக பேரவையில் உள்ள சில நிர்வாகிகள் பிரச்னைகளை வளர்க்கும் விதமாக தினந்தோறும் விதண்டவாத பதிவுகளை இடுவதும், அதற்கு மற்றொரு தரப்பு பதில் அளிக்கிறோம் என்ற பெயரில் எதிர்த்து பதிவிடுவதும் மீண்டும் இருவரும் ஒன்று சேர்வதற்கே வாய்ப்பில்லாத சூழலை உருவாக்கியுள்ளது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி சிலர் போலி சமூக வலைதள கணக்குகளை உருவாக்கி, இரு தரப்பினரையும் கொதிப்படைய செய்யும் வகையிலான பதிவுகளை வெளியிடுவது, ஆபாச பேச்சுகளை பேசி தரம் தாழ்ந்த செயலில் ஈடுபடுகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் பா.ம.க., நிலைமை 2026 தேர்தலுக்குப்பின் மோசமாகி விடும் என கட்சியின் மீது அக்கறையுள்ள நிர்வாகிகள், வருத்தப் படுகின்றனர்.