கிராம ஊராட்சிகளை கவனிக்க தனி அலுவலர்கள்... நியமனம்; ஒன்றியங்களை உதவி இயக்குனர்கள் கவனிப்பர்
கடலுார்: தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் டிசம்பர் மாதம் முடிவடைந்ததால், கிராம ஊராட்சிகளை நிர்வகிக்க தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஊரக உள்ளாட்சி அமைப்புகளாக கிராம அளவில் ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய தலைவர், ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பில் 15 மாநகராட்சிகள், 148 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 12,524 கிராம ஊராட்சிகள், சென்னை மாவட்டம் தவிர்த்து 36 மாவட்ட ஊராட்சி குழுக்கள் உள்ளன.ஊரக உள்ளாட்சிகளான கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கு கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 27 முதற்கட்டமாகவும், 30ம் தேதி இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்று 5 ஆண்டு காலம் கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது. அதற்குள் தேர்தல் நடத்தி உள்ளாட்சி பதவிகளுக்கு பொறுப்பேற்றிருக்க வேண்டும். ஆனால் தேர்தல் நடைபெறாததால் பதவியில் இருந்தவர்கள் தங்கள் வகித்த பதவி தாமாகவே காலாவதியாகிவிடும். அதன்படி உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்தது.இந்நிலையில், ஊராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் மக்கள் திட்ட ப்பணிகளை கவனிக்க தனி அலுவலர்களை, மாவட்ட நிர்வாகம் நியமித்துள்ளது. அதன்படி, அந்தந்த கிராம ஊராட்சிகளை கவனிக்க வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களை இரண்டாக பிரித்து, 7 ஒன்றியங்களுக்கு ஒரு உதவி இயக்குனர் (பஞ்சாயத்து) சிறப்பு அலுவலராக பதவி வகிப்பர் என, தெரிவிக்கப்பட்டள்ளது.இனி, தனி அலுவலர்கள் கட்டுப்பாட்டில் உள்ளாட்சி நிர்வாகம் வந்துள்ளது. இனி, இவர்கள் தான் ஊராட்சி செயலர் மூலமாக பணிகளை கவனிப்பர், கிராம மக்களும், இனி தங்கள் பகுதிக்கு தேவையானவைகளை அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களை அணுகி பெறலாம்.