| ADDED : பிப் 05, 2024 04:17 AM
கடலுார் : கடலுாரில், போதை ஆசாமிகள் இருவர், தனியார் பஸ் மீது சரமாரியாக கற்களை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கடலுார் பஸ் நிலையத்தில் இருந்து விழுப்புரத்திற்கு நேற்று தனியார் பஸ் புறப்பட்டது. கடலுார் தலைமை தபால் நிலைய பஸ் நிறுத்தம் அருகில் பஸ் வந்த போது, குடிபோதையில் 30, 35 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் நெல்லிக்குப்பம் செல்ல வேண்டுமென கூறி ஏறினர்.நெல்லிக்குப்பத்தில் பஸ் நிற்காது என கண்டக்டர் கூறி இருவரையும் கீழே இறக்கி விட்டார். ஆத்திரமடைந்த இருவரும், பஸ் மீது திடீரென கற்களை வீசினார். பயணிகள் கூச்சலிட்டதால் பரபரப்பு நிலவியது. முன்படியின் பக்கவாட்டு கைப்பிடி இரும்பு பைப்பில் கல் விழுந்ததால் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.இருவரையும் பொதுமக்கள் பிடித்து கடலுார், புதுநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார், நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த இருவரையும் எச்சரித்து அனுப்பினர்.