உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதல்வர் கோப்பை போட்டியில் குளறுபடி கடலுாரில் மாணவர்கள் ஏமாற்றம்

முதல்வர் கோப்பை போட்டியில் குளறுபடி கடலுாரில் மாணவர்கள் ஏமாற்றம்

கடலுார்: கடலுாரில் நடந்த முதல்வர் கோப்பைக்கான சிலம்பம் போட்டியில் எடை குறைவான மாணவர்களை போட்டியில் பங்கேற்க அனுமதிக்காததால் பரபரப்பு நிலவியது. தமிழகம் முழுவதும், முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள் கடந்த 29ம் தேதி துவங்கியது. இப்போட்டி இன்று (2ம் தேதி) வரை நடக்கிறது. நீச்சல், இறகுப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, வளைகோல்பந்து, கபடி, வாலிபால், ஹேண்ட் பால் மற்றும் கோ கோ, தடகளம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் நேற்று நடந்த சிலம்பம் போட்டியில் பங்கேற்க சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில் உட்பட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காலை 7:30 மணி முதலே வந்தனர். அதில் மாணவர்களின் எடையை 10:00 மணிக்கு மேல் சோதனை செய்த போட்டி நடுவர்கள், 45 கிலோவிற்கு கீழ் உள்ள 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை எடை குறைவு எனக் கூறி போட்டியில் பங்கேற்க அனுமதி மறுத்தனர். இதனால் நடுவர்களிடம் பெற்றோர வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து தெரிவிப்பதாக நடுவர்கள் கூறி சென்றனர். இதனால் மாணவர்கள், பெற்றோர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர். அதன்பின் வந்த போட்டி நடுவர்கள், எடை குறைவாக உள்ள மாணவர்களை அனுமதிக்க முடியாது என கண்டிப்புடன் கூறியதால் பல மாதங்களாக பயிற்சி பெற்று போட்டியில் பங்கேற்க வந்த மாணவர்கள் ஏமாற்றமடைந்தனர். பள்ளி மாணவர்களிடையே விளையாட்டை ஊக்குவிக்க நடத்தப்படும் போட்டிகளில் ஒரு பிரிவிலேயே 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், திருப்பி அனுப்பப்பட்டது மாணவர்கள், பெற்றோர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், 'போட்டிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போதே எடை, வயது உள்ளிட்டவைகளை பதிவு செய்திருந்தனர். அதில், எடை மற்றும் வயது குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை இருந்திருந்தால் மாணவர்கள் வந்திருக்க மாட்டார்கள். ஆனால், திடீரென எடை பரிசோதனையில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக மாணவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. 45 கிலோவிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கென ஒரு பிரிவை வைத்திருக்க வே ண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ