கஸ்டம்ஸ் சாலையில் பாலம் உள்வாங்கியது: அதிகாரிகள் அலட்சியத்தால் அவலம்
நெல்லிக்குப்பம்: அதிகாரிகள் அலட்சியத்தால் கஸ்டம்ஸ் சாலையில் பாலம் உள்வாங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடலூரில் இருந்து பகண்டை வரை பெண்ணையாற்றின் கரையில் கஸ்டம்ஸ் சாலை உள்ளது. புதுச்சேரியில் இருந்து பண்ருட்டி,விழுப்புரம் செல்லும் வாகனங்கள் நெல்லிக்குப்பம்,மேல்பட்டாம்பாக்கம் நகர பகுதிகளில் போக்குவரத்தில் சிக்காமல் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆற்றில் அளவுக்கு அதிகமான தண்ணீர் சென்றது.இதனால் மேல்பட்டாம்பாக்கம் உட்பட பல இடங்களில் சாலை சேதமானது.அதேபோல் மருதாடு அருகே சாலையின் குறுக்கே இருந்த பாலம் சேதமானது.நெடுஞ்சாலை துறையினர் பெயரளவுக்கு பாலத்தை சரி செய்தனர். நேற்று முன்தினம் பெய்த கனமழையால் பாலம் உள்வாங்கியது.இதனால் அந்த சாலையில் வாகனங்கள் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் பல கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அதிகாரிகள் அலட்சியத்தால் சேதமான சாலையையும் சரி செய்யாமல் உள்ளனர். நடப்பு ஆண்டும் ஆற்றில் நீர்வரத்து அதிகமாக வாய்ப்புள்ளதால் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.