தீராத பிரச்னையாக போக்குவரத்து நெரிசல் விருதையில் பொதுமக்கள் அவதி
விருத்தாசலம்:விருத்தாசலத்தில் விசேஷ நாட்களில் தொடரும் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. விருத்தாசலம் உட்கோட்ட தலைமையிடமாக இருப்பதால் சுற்றியுள்ள 125க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அன்றாட தேவைக்கு வந்து செல்கின்றனர். ஜவுளி, ஜூவல்லரி, மளிகை மட்டுமல்லாது மருத்துவம், கல்வி, பொழுதுபோக்கு தேவைகளுக்கும் ஆயிரக்கணக்கானோர் கூடுவதால் நகரில் பெரும்பாலும் போக்குவரத்து பாதிப்பது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், நகரின் பிரதான ஜங்ஷன் சாலை, கடலுார், வேப்பூர், பெண்ணாடம் சாலை மார்க்கத்தில் வணிக நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் இருப்பதால் வாடிக்கையாளர்கள் ஆங்காங்கே தாறுமாறாக வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். அதுபோல், ஜங்ஷன் சாலையில் பஸ் நிலையம் இருப்பதால் பஸ்கள் வந்து செல்லும்போது நெரிசல் அதிகரிக்கிறது. புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்படாத நிலையில், பாலக்கரை, பஸ் நிலையம், கடைவீதி மார்க்கத்தில் பயணிகள் இறங்கி ஏறும்போது போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்களில் பிரதான சாலைகளை தவிர்த்து பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களை புறவழிச்சாலையில் திருப்பிவிட வேண்டும். இதனால் இருசக்கர வாகனங்கள், பாதசாரியாக செல்வோர் விபத்து அபாயமின்றி எளிதில் பொருட்களை வாங்கிச் செல்ல முடியும். இது குறித்து விருத்தாசலம் வர்த்தக சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.