நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவீரம்
மந்தாரக்குப்பம்: கெங்கைகொண்டான் பேரூராட்சியில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது. கெங்கைகொண்டான் பேரூராட்சி பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக, கால்நடை உதவி மருத்துவர் வித்யாசங்கர் தலைமையில் கெங்கைகொண்டான் பேரூராட்சி பகுதியில் சுற்றி திரிந்த 54 தெரு நாய்களை பிடித்து வெறிநாய் தடுப்பூசி போடும் பணி நடந்தது . அப்போது கெங்கைகொண்டான் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரி, பேரூராட்சி சேர்மன் பரிதா அப்பாஸ், இளநிலை உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி, துப்பரவு ஆய்வாளர் முகமது யாசிக், கால்நடை மருத்துவ குழுவினர் உடனிருந்தனர். தடுப்பூசி போடப்பட்ட நாய்கள் அடையாளம் காணும் வகையில் வண்ணம் பூசப்பட்டது. தடுப்பூசிகளால் நாய்களால் ஏற்படும் பாதிப்புகள் குறையும் எ ன அதிகாரிகள் தெரிவித்தனர்.