உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தினமலர் மெகா கோலப்போட்டி: விழாக்கோலம் பூண்டது கடலுார் சில்வர் பீச் * பரிசு மழையில் நனைந்த போட்டியாளர்கள்

தினமலர் மெகா கோலப்போட்டி: விழாக்கோலம் பூண்டது கடலுார் சில்வர் பீச் * பரிசு மழையில் நனைந்த போட்டியாளர்கள்

கடலுார் : 'தினமலர்' நாளிதழ் சார்பில் கடலுாரில் நடந்த மெகா கோலப்போட்டியில், கடலுார் மட்டுமின்றி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.பெண்களின் கோலமிடும் திறமைக்கு மகுடம் சூட்டி மகிழ்விக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் சார்பில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் 'மெகா' கோலப்போட்டி நடத்தி, பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.இந்தாண்டு, சூப்பர் 'ருசி' பால் நிறுவனத்துடன் இணைந்து, கடலுார் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் 'மெகா' கோலப்போட்டி நேற்று நடத்தப்பட்டது.

மகளிர் குவிந்தனர்

கடலுாரில் முதல் முறையாக 'மெகா' கோலப்போட்டி நடத்தப்பட்ட நிலையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்து அதிகாலை முதலே மகளிர் ஆர்வமுடன் குவிந்தனர்.காலை 7:00 மணிக்கு போட்டி துவங்குவதாக அறிவிக்கப்பட்டாலும், கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் அதிகாலை 4:00 மணிக்கே பெண்கள் அணி அணியாக வந்தனர். சிலர் நள்ளிரவு நேரத்தில் வருகை தந்து பீச்சில் காத்திருந்து போட்டியில் பங்கேற்றனர்.

நடுவர்குழு திணறல்

புள்ளிக்கோலம், ரங்கோலி, டிசைன் என மூன்று பிரிவுகளில் கோலப்போட்டி நடத்தப்பட்டது. போட்டியாளர்களுக்கு 4 க்கு 4 அடி இடம் ஒதுக்கப்பட்டது. சரியாக 7:00 மணிக்கு துவங்கிய போட்டி, 8:00 மணிக்கு முடிந்தது. ஒரு மணி நேரத்தில், போட்டியாளர்கள் பல்வேறு வண்ணங்களில் கோலங்களை வரைந்து அசத்தினர். இதனால், கடற்கரை சாலை அழகோவியங்களாக காட்சியளித்தன.மகளிர் திட்ட இயக்குனர் செந்தில் வடிவு, ஜி.ஆர்.கே. எஸ்டேட் நிர்வாக இயக்குனர் கோமதி துரைராஜ், வி.ஸ்கொயர் மால் உரிமையாளர் அனிதா ரமேஷ், ஓய்வு பெற்ற ஆசிரியை ரமாமணி திருமலை, விழுப்புரம் சுமதி கோபால் ஆகியோர் அடங்கிய நடுவர் குழுவினர், சிறந்த கோலங்களை தேர்வு செய்தனர். நுாற்றுக்கணக்கான சிறந்த கோலங்களில் பரிசுக்குரிய கோலங்களை தேர்ந்தெடுப்பதில் நடுவர் குழுவினர் திணறினர். அந்த அளவிற்கு அனைத்து கோலங்களும் சிறப்பாக இருந்தது. இருப்பினும் இப்பணியை நடுவர் குழுவினர் நின்று நிதானித்து சிறப்பாக செய்தனர்.

பரிசு மழையில் ேபாட்டியாளர்கள்

புள்ளிக்கோலம், ரங்கோலி, டிசைன் என 3 பிரிவுகளில், ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த மூன்று கோலங்கள் தேர்வு செய்யப்பட்டு, பரிசு வழங்கப்பட்டது. கலெக்டர் தம்புராஜ், எஸ்.பி., ராஜாராம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, சிறந்த கோலமிட்ட மகளிருக்கு பரிசு வழங்கினர்.இதில், புதுவண்டிப்பாளையத்தை சேர்ந்த சுசீலா, மேல்குமாரமங்கலம் சந்திரலேகா, விருத்தாசலம் பிரித்தீ ஆகியோர் முதல் பரிசான வாஷிங் மெஷின் பெற்றனர்.இரண்டாம் பரிசான 4 கிராம தங்க காசை, கீழ்குமாரமங்கலம் தமிழ்ச்செல்வி, கடலுார் சங்கீதா வசந்தராஜ், மணலுார்பேட்டை சசிகலா ஆகியோரும், மூன்றாம் பரிசான பிரிட்ஜை, விழுப்புரம் ரஞ்சிதம் கோமதி, கள்ளக்குறிச்சி தீபலட்சுமி, குண்டுஉப்பலவாடி அன்பரசி ஆகியோர் பெற்றனர்.மேலும், அடுத்தடுத்த பரிசாக எல்.இ.டி., டிவி, 3 பேருக்கும், சைக்கிள் 3 பேர், டேபிள் டாப் கிரைண்டர் 3 நபர்கள், கேஸ் ஸ்டவ் 12 பேர், டைட்டான் வாட்ச் 15 பேர் மற்றும் 15 கிலோ அரிசி சிப்பம் 15 நபர்களுக்கும் என, மொத்தம் 60 பரிசுகள் வழங்கப்பட்டன.

அனைவருக்கும் பரிசு

கோலப்போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கும் சேலை மற்றும் பிளவுஸ் பிட், மளிகை பொருட்கள், பேஸ் கிரீம், பவுடர், ேஹர் ஆயில், சில்வர் பாக்ஸ், மஞ்சள் துாள் பாக்கட், குங்குமசிமிழ், காய்கறி விதை பாக்கெட், கோலமாவு பாக்கெட், லிவிஸ்டா இன்ஸ்டண்ட் காபிதுாள், வாட்டர் பாட்டில், பேன்சி பொருட்கள், காலண்டர், கேக், பூச்செடி 15 பொருட்கள் அடங்கிய தொகுப்பு பரிசாக வழங்கப்பட்டது.

வாகன வசதி

கோலப்போட்டியில் பங்கேற்க வருபவர்களின் வசதிக்காக கடலுார் பஸ் நிலையத்தில் இருந்து அதிகாலை 4:00 மணி முதல் அரசு பஸ்கள் மற்றும் மஞ்சக்குப்பம் தபால் நிலையம், கிருஷ்ணாலயா தியேட்டர் அருகில் இருந்து வேன் இயக்கப்பட்டது.

விழாக்கோலம்

கடலுார் சில்வர் பீச்சில் மகளிர் வரைந்த வண்ண கோலங்களை ஏராளமான பொதுமக்கள் திரண்டு பார்த்து ரசித்தனர். கோலமிட்டவர்களை பாராட்டியதுடன், சிறந்த கோலங்களை மொபைல் போனில் படம் பிடித்தும் சென்றனர். மக்கள் கூட்டத்தால் கடலுார் சில்வர் பீச் விழாக்கோலம் பூண்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ