உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திருக்குறள் முற்றோதல் பரிசு: விண்ணப்பிக்க அழைப்பு

திருக்குறள் முற்றோதல் பரிசு: விண்ணப்பிக்க அழைப்பு

கடலுார்: திருக்குறள் முற்றோதல் பரிசு பெறுவதற்கு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறினார். இதுகுறித்து அவரது செய்திக்குறிப்பு: மனித குலம் அனைத்திற்குமான தன்னிகரற்ற படைப்பு திருக்குறள். இத்தகைய சிறப்புமிக்க அறக்கருத்துகள் அடங்கிய திருக்குறட்பாக்களை மாண வர்கள் இளம்வயதிலேயே மனப்பாடம் செய்தால் அவை பசுமரத்தாணிபோல் பதிந்து, நெஞ்சில் நிலைத்து அவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டும். திருக்குறள் முற்றோதல் செய்யும் மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டுவது, மாணவர்களின் நல்வாழ்வுக்கு துணை நிற்பதாக அமையும். இதனைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் 1,330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பரிசு தலா 5,000 ரூபாய் வீதம் பரிசுத் தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. திருக்குறள் முற்றோதல் பரிசு பெறுவதற்கான திறனாய்வு போட்டி கடலுார் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சி துறையினரால் நடத்தப்படும். பரிசு பெற 1,330 குறள்களையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். இயல் எண், பெயர், அதிகாரம் எண், பெயர், குறள் எண், பெயர் போன்றவற்றை தெரிவித்தால் அதற்குரிய திருக்குறளைக் கூறும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், திருவள்ளுவரின் சிறப்பு பெயர்கள், திருக்குறளின் சிறப்புகளை அறிந்தவராக இருக்க வேண்டும். அரசு, அரசு உதவி பெறும், தனியார் மற்றும் மத்திய அரசு போன்ற பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்கள் பங்கு பெறலாம். திருக்குறள் முற்றோதும் திறன் படைத்த மாணவர்கள் tamilvalarchithurai.tn.gov.inஎன்ற இணையவழி மூலம் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை