கார் மோதிய விபத்தில், பாதயாத்திரை சென்ற தந்தை மகள் உள்ளிட்ட மூவர் பலி; 4 பேர் படுகாயம் விருத்தாசலத்தில் அதிகாலையில் நடந்த சோக
விருத்தாசலம்; மேல்நாரியப்பனுார் அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு பாதயாத்திரை சென்றபோது, கார் மோதிய விபத்தில் தந்தை, மகள் உட்பட மூன்று பேர் இறந்தனர். இதில் 4 பேர் படுகாயமடைந்தனர்.. கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த வரதராஜன்பேட்டையை சேர்ந்தவர் இருதயசாமி, 40; இவரது மகள் சகாயமேரி, 18; மற்றும் அதேபகுதியை சேர்ந்த இருதயராஜ் மகள் ஸ்டெல்லா மேரி, 36; உள்ளிட்ட 9பேர் தங்களது குடும்பத்தினருடன், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனுார் கிராமத்தில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெறும் திருவிழாவிற்காக, நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் தங்களது ஊரில் இருந்து பாதயாத்திரியைாக கிளம்பினர்.நேற்று அதிகாலை 3:00 மணியளவில் விருத்தாசலம் - சேலம் புறவழிச்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் மீது 9 பேரும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.அப்போது, பின்னால் வந்த, (டி.என்.16 - பி.9568) என்ற பதிவெண் கொண்ட கார், கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் நடந்து சென்ற 9 பேர் மீதும் மோதியது.இதில், பாதயாத்தியை சென்ற 7 பேர் துாக்கி விசப்பட்டுள்ளனர். இந்த கோர விபத்தில், இருதயசாமி, சகாயமேரி மற்றும் ஸ்டெல்லா மேரி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் படுகாயமடைந்த அமுதன், சார்லஸ், செலின் ரோஸ்லின் மேரி, மற்றும் ஆனந்தி ஆகிய நால்வரையும், அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலமாக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதில், இருவர் நிலை மோசமானதால், சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு, தப்பிச்சென்ற கார் டிரைவர் குறித்து, விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் புதுச்சத்திரம் அடுத்த வேளங்கிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சங்கர், 43. என்பது தெரிந்தது. மேலும், அதேபகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவரை கல்லுாரி சேர்க்கைக்கு, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திற்கு சென்ற போது, இந்த விபத்து நிகழ்ந்தது தெரிய வந்தது. விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து கார் டிரைவர் சங்கரை கைது செய்தனர்.கிறிஸ்துவ திருவிழாவுக்காக பாதயாத்திரை சென்ற தந்தை, மகள் உள்ளிட்ட மூவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
துாக்க கலக்கத்தில் நடந்த விபத்து.
அதிகாலை 2:30 மணியளவில் வேளங்கிப்பட்டு கிராமத்தில் இருந்து, ராசிபுரத்தில் உள்ள தனியர் கல்லுாரியில் மாணவியை சேர்க்க, மாணவி உள்ளிட்ட 3 பெண், ஒரு ஆண் காரில் பயணம் செய்துள்ளனர். அப்போது, டிரைவர் சங்கர் துாக்க கலக்கத்தில், இந்த விபத்தை ஏற்படுத்தி இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. டீ கடை இல்லாதது காரணமா? இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு மேல், விருத்தாசலம் உட்கோட்ட பகுதியில் இரவு 11:00 மணிக்கு மேல் டீ கடை உள்ளிட்ட எந்த கடையும் திறந்திருக்க கூடாது என டி.எஸ்.பி., கறார் காட்டி வருகிறார்.இரவு நேரத்தில் நெடுந்துாரம் பயணம் செய்வோர் துாக்கத்தை போக்க டீ குடிப்பது வழக்கம். ஆனால், விருத்தாசலம் உட்கோட்டத்தில் டீ கடைகள் இல்லாததால், துாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து நடந்திருக்கலாம். ஒருவேளை விருத்தாசலம் பகுதியில் இரவு நேர டீ கடைகள் இருந்திருந்தால், டிரைவர் காரை நிறுத்தி, டீ குடித்து புத்துணர்ச்சி ஆகியிருக்க வாய்ப்புள்ளது. இந்த விபத்து நடந்திருக்க வாய்ப்பில்லை என பொதுமக்கள் பலர் கூறி வருகின்றனர்.