ஆளில்லா ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு விருத்தாசலம் அருகே ரயில் மறியல்
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே ஆளில்லா ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்க,10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த இளங்கியனுார்- பிஞ்சனுார் கிராம இணைப்பு சாலையை, பிஞ்சனுார், வலசை, எடைச்சித்துார், காட்டுப்பரூர், மே மாத்துார், உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த சாலையின் குறுக்கே விருத்தாசலம்-சேலம் ரயில்பாதை செல்கிறது. இந்த ரயில் பாதையில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட்டை கடந்து மக்கள் தினசரி செல்கின்றனர். இந்நிலையில், ஆளில்லா ரயில்வே கேட்டை அகற்றி, சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால், தற்போது, ஆளில்லா ரயில்வே கேட்டை பொதுமக்கள் யாரும் கடக்க கூடாது என ரயில்வே நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த இளங்கியனுார், பிஞ்சனுார், வலசை, எடைச்சித்துார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று காலை 10:00 மணிக்கு ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. எஸ்.பி., ஜெயக்குமார், டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஆளில்லா ரயில்வே கேட் அருகே 100 மீட்டர் தொலைவில் ரயில்வே நிர்வாகம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் சுரங்கப்பாதை அமைத்தது. அதில், தண்ணீர் தேங்கி நிற்பதால், இதுவரை பயன்படுத்த முடியவில்லை. எனவே, ஆளில்லா ரயில்வே கேட்டில், கேட் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக எஸ்.பி., ஜெயக்குமார் உறுயளித்தார். இதனையேற்று 11:30 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர்.
பாசஞ்சர் ரயில் நிறுத்தி வைப்பு
இளங்கியனுாரில் பொதுமக்கள் ரயில் மறியலில் ஈடுபட்டதால், காரைக்காலில் இருந்து விருத்தாசலம் வழியாகபெங்களூரு செல்லும் பாசஞ்சர் ரயில் முகாசபரூர் ரயில்வே ஜங்ஷனில் 15 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின், அங்கிருந்து புறப்பட்டு சென்றது.