| ADDED : ஜன 23, 2024 11:17 PM
கடலுார் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியிலுள்ள சப்டிவிஷனுக்குட்பட்ட ஆற்றோர கிராமங்களில் ஆற்றுமணல் திருட்டு, கிராமங்களில் கிராவல் திருட்டு என்பது கட்டுப்படுத்த முடியாததாகவே உள்ளது. திருட்டு குறித்து அவ்வப்போது பொதுமக்கள் போலீசாருக்கும், வருவாய்துறையினருக்கும் தகவல் கொடுத்தாலும் யாருமே கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் வேதனைப்படுகின்றனர்.விவசாயி ஒருவரின் விவசாய நிலத்தில் கிராவல் திருடியவர்கள் மீது போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தும், ஆறுமாதங்களுக்கும் மேலாக நடவடிக்கை எடுக்காமல் போலீசார் அலைக்கழிக்கின்றனர். ஒருவாரத்திற்கு முன்பு மணல் திருட்டை வீடியோ எடுத்த நபர் மீது, பொய்ப்புகார் பெற்று போலீசார் வழக்குப் பதிந்ததாக குற்றம் சாட்டுகின்றனர். மணல் திருட்டிற்கு எதிராக புகார் தெரிவிப்பவர்களிடம் திருட்டுக்கும்பல் நேரடியாகவே சென்று, எல்லா இடத்துலயும் எங்களுக்கு ஆள் இருக்கு. புகார் அளிக்க எங்கே போனாலும், இங்க நாங்க வச்சது தான் சட்டம் என கெத்துகாட்டுகின்றனர். அதை போலீசார் கண்டும் காணாமலும் இருப்பதும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.