| ADDED : நவ 22, 2025 05:47 AM
கடலுார்: கடலுார் அருகே, வைகோ நடைபயணத்தில் பங்கேற்கும் தொண்டர்களை தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. மது, போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ வரும் ஜன., 2 முதல் 12ம் தேதி வரை திருச்சியில் இருந்து மதுரை வரை நடைபயணம் மேற்கொள்கிறார். இதற்காக மண்டல வாரியாக வைகோ நேரில் சென்று தொண்டர்களை தேர்வு செய்து வருகிறார். அதையொட்டி கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய மாவட்டங்கள் அடங்கிய ம.தி.மு.க., இளைஞரணி, மாணவரணி மற்றும் தொண்டரணியிலிருந்து நடைபயணத்தில் பங்கேற்கும் தொண்டர்களை தேர்வு செய்யும் நிகழ்ச்சி கடலுார் அடுத்த ஆணையம்பேட்டையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க வந்த தொண்டர்களுக்கு உயரம், எடை உள்ளிட்ட உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் பரிசோதனை முடித்த தொண்டர்களை, வைகோ ஒவ்வொருவராக தனித்தனியாக அழைத்து நேர்காணல் நடத்தினார். அப்போது படிப்பு, தொழில் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தவர், 'இந்த நடை பயணத்திற்கு உங்களது பெற்றோர் அனுமதி அளித்துள்ளார்களா? கல்லுாரியில் படித்தால் எப்படி தேர்வுகளை சமாளிப்பீர்கள்? என்பன உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கேட்டு, தொண்டர்களை தேர்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்டச்செயலாளர் ராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.